புதுடெல்லி, நவ. 25:
எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஹேலி குப்பி எரிமலை 10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்திருக்கும் நிலையில், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை சூழ்ந்துள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக, 11 வழித்தடங்களில் விமானங்களை ரத்து செய்வதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் உள்ள ஹேலி குப்பி என்ற எரிமலை, பல்லாண்டுகளுக்குப் பின் வெடித்துள்ளது. இதனால் சாம்பல் புகை பரவி வருகிறது. இதனால், பல கிலோ மீட்டர் உயரத்துக்கு கரும்புகைகள் எழுந்த நிலையில், லாவா குழம்பும் வெளியேறி வருகின்றது. அப்பகுதியில் உள்ள மக்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது.
ஹேலி குப்பி எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல் மேகக் கூட்டங்கள் நேற்றிரவு இந்திய வான் பரப்பை அடைந்தது. குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா வழியாக டில்லி வான் பரப்பிலும் சாம்பல் மேகக் கூட்டங்கள் சூழ்ந்துள்ளன. இதனால், டில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
விமான சேவைகள் பாதிப்பு
சாம்பல் மேகக் கூட்டங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு மற்றும் சிறிய பாறைத் துகள்கள் ஆகியவை சுமார் 10 முதல் 15 கி.மீ. உயரம் வளிமண்டலம் வரையில் பரவியுள்ளன. இதன்காரணமாக, இந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் குறிப்பிட்ட அந்த பகுதியில் பறப்பதை தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவுறுத்தி உள்ளது.
இதை ஏற்று பல்வேறு விமான நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. இன்றும், நாளையும் இயக்கப்பட வேண்டிய நேவர்க்- – டில்லி, நியூயார்க்- – டில்லி, துபாய்- – ஐதராபாத், தோஹா -– மும்பை, துபாய் –- சென்னை, தம்மம் –- மும்பை, தோஹா -– டில்லி, மும்பை- – கோல்கட்டா -– மும்பை உள்ளிட்ட 11 விமானங்களை ரத்து செய்வதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்று பயண ஏற்பாடு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், பயணிகளின் சிரமங்களுக்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, ஆகாசா ஏர், இண்டிகோ, கேஎல்எம் நிறுவனங்களும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.
![]()





