செய்திகள்

10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தின்றி பேருந்து இயக்கிய ஒட்டுநர்களுக்கு பரிசு வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி வழங்கினார்.

Makkal Kural Official

வேலூர், டிச. 20–

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (வி) வேலூர் மண்டலம் சார்பில் பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்து ஓட்டுநர்களுக்கு பயிற்சி வகுப்பினை கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி ரங்காபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இப்பயிற்சி வகுப்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தின்றி பேருந்து இயக்கிய 20 ஒட்டுநர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநராக பணிபுரிவது என்பது சமூகத்தில் கிடைக்கும் மரியாதை. நம்முடைய கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். அரசு பேருந்துகளில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் ஓட்டுநர்களாகிய உங்களை நம்பி பயணிக்கின்றனர். அவர்களின் பயணத்தை பாதுகாப்பான பயணமாக அமைத்து தர வேண்டியது ஓட்டுநர்களின் கடமை.

நம்முடைய மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துகளில் இரு சக்கர வாகன விபத்துகளும், பாதசாரிகளின் விபத்துகளுமே அதிகமாக உள்ளன. அவர்களுக்கு சாலை பாதுகாப்பை பின்பற்ற வேண்டிய கடமை இருந்தாலும், அதைவிட கூடுதலான கடமை அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு உள்ளது. அவர்களை விட ஓட்டுநர்கள் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஓட்டுநரும் தங்களுடைய உடல்நலத்தையும் பேணி காக்க வேண்டும். ஆரோக்கியதோடு இருந்தால்தான் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க முடியும். நம் குடும்பத்தையும் நல்ல முறையில் வழிநடத்த முடியும். நடத்துநர்கள் பயணிகளுடன் மிகவும் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும்.

பேருந்தினை இயக்கும்போது கைபேசியை பயன்படுத்தக்கூடாது. வளைவுகள் மற்றும் குறுகலான மேம்பாலங்களில் முன்செல்லும் வாகனத்தை முந்த கூடாது. முழு கவனமும் சிந்தனையும் சாலையில் இருக்க வேண்டும். கவனம் சிதறாமல் பேருந்தினை இயக்கினால் பயணம் விபத்தில்லா பயணமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் வேலூர் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (வி) லிட் மேலாண் இயக்குநர் க.குணசேகரன், பொது மேலாளர் தா.பென்னட் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *