சென்னை, ஆக.25-–
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மாநிலத்தில் எங்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டுவதற்கு மாநில சூற்றுச்சூழல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, ராமநாதபுரம், திருவாடானை, கீழக்கரை ஆகிய தாலுகாவில் உள்ள 20 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 20 இடங்களில் கிணறுகள் தோண்டுவதற்கான திட்ட மதிப்பீடு ரூ.675 கோடி ஆகும்.
ஒவ்வொரு கிணறும் பூமியில் இருந்து 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மீட்டர்கள் வரை தோண்டப்படும். அதில் ஹைட்ரோ கார்பன் கண்டறியப் பட்டால் அது உற்பத்தி கிணறாக மாற்றப்படும். ஏற்கனவே இது போல காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. எனவே அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த முற்றிலும் தடை ஏற்பட்டது. ஆனால் ராமநாதபுரம், வேளாண் மண்டலமாக இல்லாததால் அங்கு அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு, கடந்த 20.2.2020 அன்று தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம்-–2020 இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மை மண்டலமாக அறிவித்தது.
இந்த சட்டத்தின் அடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய டெல்டா பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி, மீத்தேன் மற்றும் ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி மற்றும் அகழ்வுத் தொழில்கள் ஆகியவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. மேலும், கடந்த 2023-ம் ஆண்டு இந்த தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதற்கிடையே, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்திருந்ததை தொடர்ந்து, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை நேரடியாக வழங்கியுள்ள செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இதனையடுத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதலமைச்சர் திடமான கொள்கை முடிவாகும். எனவே, தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் இந்த திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என திட்ட வட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()





