செய்திகள்

ஹாங்காங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி, 300 பேர் மாயம்

Makkal Kural Official

விக்டோரியா,நவ. 27–

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தீப்பற்றியதில் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போன 300 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங்கின், ‘தாய்போ’ மாகாணத்தில் ‘வாங் புக் கோர்ட்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு தலா 35 மாடிகளுடன் வரிசையாக எட்டு கட்டடங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 2,000 வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர்.இந்த குடியிருப்பு வளாகத்தில் புதுப்பிக்கும் பணிகளுக்காக மூங்கில் சாரங்கள் மற்றும் வலைகள் கட்டப்பட்டிருந்தன. ஒரு கட்டடத்தில் இருந்த மூங்கில் சாரத்தில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் அடுத்தடுத்த கட்டடங்களுக்கும் தீ மளமளவென பரவியது.

7 கட்டடங்களில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்ததால், அந்தப்பகுதியே சிவப்பு நிறமாக காட்சியளித்ததுடன் புகை மண்டலமாக மாறியது. தகவல் அறிந்து 128 தீயணைப்பு வாகனங்களில், 767 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கட்டுக்கடங்காமல் எரிந்த தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 44-ஐ கடந்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த 300 பேர் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் முதியோர் என தெரியவந்துள்ளது.

சுமார் 18 மணிநேரம் போராடி தற்போது தீயை வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீயணைக்கும் பணியின் போது 37 வயது தீயணைப்பு வீரர் தீயில் சிக்கி பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டிய கட்டுமான நிறுவனத்தின் 3 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *