உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, நவ.8–
புதுடெல்லியில் ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி நடைபெற்ற காட்சிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் முன்னணி ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக, ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியில், இந்திய ஹாக்கி அணி பல்வேறு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தருணங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங்களை பார்வையிட்டு, ஹாக்கி இந்தியா நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
முதலமைச்சர் கடந்த 5–ந் தேதி அன்று சென்னை தலைமைச் செயலகத்தில், அறிமுகப்படுத்திய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றி கோப்பை, அதன் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக புதுடெல்லியில் நடைபெற்ற ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் காட்சிப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:–
1996–ம் ஆண்டு இந்தியாவின் முதல் சாம்பியன்ஸ் டிராபியையும், அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி 2005 ஆம் ஆண்டிலும், 2007–ம் ஆண்டு ஆசிய கோப்பையையும், 1999–ம் ஆண்டு இந்தியா–-பாகிஸ்தான் தொடரையும், 2008–ம் ஆண்டு இந்தியா–-பெல்ஜியம் தொடரையும் சென்னையில் நடத்தியது.
24 நாடுகளின் அணிகள்…
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023–ம் ஆண்டு 7வது ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியுடன், ஹாக்கி சென்னைக்குத் திரும்பியது. உலகின் முதல் பாலிகிராஸ் பாரிஸ் ஜிடி ஈகோ டர்ஃபில் போட்டிகள் நடத்தப்பட்டன, ஜிடி ஈகோ டர்ஃப் பின்னர் 2024–ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பெற்றது.
இந்திய அணிக்கு ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் என்பது மைதானத்தில் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, ஹாக்கி விளையாட்டு மீதான நமது மக்களின் ஆர்வத்தை மீண்டும் தூண்டிய தருணம்.
இப்போது, மற்றொரு வரலாற்று அத்தியாயத்தில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். 2025–ம் ஆண்டு FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை நடத்த தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக, அனைத்து கண்டங்களிலிருந்தும் மொத்தம் 24 நாடுகளின் அணிகள் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு வெவ்வேறு நகரங்களில் நடைபெற உள்ள 72 பரபரப்பான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளன.
திராவிட மாடல் அரசு ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்காக சுமார் 70 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, நாங்கள் ஹாக்கி விளையாட்டை தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்கின்றோம்.
இன்று, மாநிலம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்ட ஹாக்கி வீரர்கள் பள்ளிகள் அளவிலான போட்டிகள், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் மற்றும் பல ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
ஹாக்கி இந்தியா தனது புகழ்பெற்ற பயணத்தைத் தொடரவும், இந்தியா உலகின் ஹாக்கி தலைநகராகத் தொடரவும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
![]()





