டேராடூன், ஜூலை 27–
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த துயர சம்பவம், கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் நடந்துள்ளது.
கூட்டத்தில் இருந்த சிலர் மின்சாரம் தாக்கியதாக வதந்தி கிளப்பியதால், பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து கார்வால் கோட்ட ஆணையர் வினய் ஷங்கர் பாண்டே கூறுகையில், நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு மானசா தேவி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சம்பவ இடத்தில் காயமடைந்த பக்தர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுவரை 55 பேர் காயம் அடைந்துள்ளனர். 6 பேர் பலியாகி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
பக்தர்களுக்கு முக்கியமான வழிபாட்டு தலமாக ஹரித்வார் விளங்குகிறது. குறிப்பாக, சாவன் மாதத்தில் கங்கை நதியில் இருந்து நீர் எடுக்க பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள்.
இது குறித்து பீகாரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கூறுகையில், “கோவிலில் திடீரென அதிகமான மக்கள் கூட்டம் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்திலிருந்து வெளியேற முயன்றபோது கீழே விழுந்து கை முறிந்தது” என்று கூறியுள்ளார்.
இந்த விபத்து குறித்து அம்மாநில முதல்வர் கூறுகையில், “இந்த செய்தி எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
மாநில பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் காவல்துறை மற்றும் பிற மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து பேசி வருகிறேன். நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், நல்வாழ்வுக்காகவும் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் இரங்கல்
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில்,
மானசா தேவி கோவிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் தேவையான உதவிகளை செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
![]()





