சென்னை, நவ. 17–
நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என மேலாண் தொழில்நுட்பக் கல்வி ஆலோசகர் பி.அன்புத் தம்பி கூறினார்.
மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண் கல்லூரி சார்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசுகையில், ‘சர்வதேச அளவில் கணினி விளையாட்டில் 70 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தற்போது அனைத்துத் துறைகளின் வளர்ச்சி முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார்.
நாட்டில் உயர் கல்வித் துறையில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம், கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் உயர் கல்விக்கான பாடத்திட்டத்தை வடிவமைக்க உறுதுணை புரிகிறது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கிறது. ஆசிரியர்கள் மாணவரின் திறனுக்கு ஏற்ப கற்பிக்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு துல்லியமாக வழிகாட்ட உதவுகிறது. மாணவர்களின் திறமைகளைப் புரிந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்த உறுதுணையாகத் திகழ்கிறது என்றார் அவர்.
ஸ்ரீநாத் ரெட்டி
நிகழ்வில் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிக் கல்லூரி தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீநாத் ரெட்டி, சாய்ராம் பொறியியல் கல்லூரி இயக்குநர்கள் ராஜேந்திர பிரசாத்,ரெனிராபின், முதல்வர் ஜெ.ராஜா, ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண் கல்லூரி இயக்குநர் கே.மாறன், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் தயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
![]()





