சென்னை, ஆக.1-
உலக சாதனை படைத்திருக்கும் மேடை திரைப்பட மெல்லிசைக் குழுவின் நிறுவனர் லக்ஷ்மண் ஸ்ருதியை திரை இசை விருந்து படைக்கும் படைப்பாளி, ‘மிமிக்ரி’ கலைஞர் என்று தானே தெரியும் வெளி உலகுக்கு? ஆனால் அவர் –
தமிழ் சினிமாவில் நடிகர்கள் சத்யராஜ், பிரபு, நடிகை ஸ்ரீதேவிக்கு ஸ்டண்ட் காட்சிகளில் ‘‘டூப்’’ போட்டிருக்கும் நடிகர் என்ற ஒரு தகவலை அவர் வாயால் சொல்லக் கேட்டதும் பார்வையாளர்கள் பலரும் அதிசயித்துப் போனார்கள்.
இன்னும் ஒரு சில வாரங்களில் லக்ஷ்மண் ஸ்ருதியின் 39வது ஆண்டு விழாவைக் கொண்டாடவிருக்கும் அவர், ஸ்ருதி கலைக்குழுவை துவக்கிய நாட்களில் எனக்கு சங்கீத ஞானமே கிடையாது. எல்லாம் வெறும் கேள்வி ஞானத்திலேயே ஓட்டி வந்தேன். 45 வயதில் தான் முறைப்படி கர்நாடக இசையையேக் கற்க ஆரம்பித்தேன். (எந்த ஒரு கலையையும் கற்க வயது ஒரு தடையல்ல… ஆர்வம், அக்கறை போதும்) என்று சொன்னபோது, பார்வையாளர்கள் மீண்டும் அதிசயித்துப் போனார்கள்.
இளம் பிராயத்திலிருந்து இசையை முறைப்படி கற்று – பயிற்சி எடுக்காத ஒரே காரணந்தான் மெல்லிசையிலிருந்து திரைத்துறைக்கு இசையமைப்பாளராக வரத் தயக்கம் காட்டி வந்தேன் என்று உண்மையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.
லக்ஷ்மண் ஸ்ருதி குழுவின் நிறுவனர் லக்ஷ்மணனுடன் சந்திப்புக்கு ‘‘பேனாக்கள் பேரவை’’ சார்பில் என்.சி.மோகன்தாஸ் ஏற்பாடு செய்திருந்தார். நுங்கம்பாக்கம் மேயர் சம்பந்தம் கன்வென்ஷன் ஹாலில் நிகழ்ச்சி நடந்தது. அன்று மாலை இசைமழையுடன் சந்திப்பு என்பதாலோ என்னவோ வருண பகவானும் உற்சாகமாக மழைதூவி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக ‘‘சாய் – சங்கரா மேட்ரிமோனி’’ பஞ்சாபகேசன், எழுத்தாளர் தேவிபாலா திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கடேசன், புகைப்படக் கலைஞர் யோகா, மூத்த பத்திரிகையாளர் நூருல்லா உள்ளிட்ட எழுத்தாளர்கள் 40 பேர் கலந்து கொண்டனர்.
வரவேற்புரை வழங்கினார் சம்பத். விருந்தினர்களுக்குப் பயனாடை அணிவித்து முடிந்ததும் அகிலா ஜுவாலா, லக்ஷ்மண் பற்றிய அறிமுக உரையை முடித்ததும் லக்ஷ்மண் தன் இசைப் பயணம் குறித்து சுவாரஸ்யமான விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
18 வயதில் ஸ்டண்ட் கலைஞர்
இவரது இசைமுகம் மட்டுமே இதுவரை அனைவரும் அறிந்தது. இவர் 18 வயதிலேயே திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளில் பறந்து பறந்து அடித்ததும், கதாநாயகனுக்கு (சத்ராஜ், பிரபு) டூப்பாக நடித்ததும் இப்போது தான் தெரிந்தது. நடிகை ஸ்ரீதேவிக்குக் கூட டூப்பாக நடித்திருக்கேன் என்று சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஆரம்பத்தில் சிலம்பம் மட்டுமே தெரியுமாம். அதன்பின் சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்காகவே குதிரை ஏற்றம், ஜிம்னாஸ்டிக், கத்திச்சண்டை, குத்துச்சண்டை எல்லாம் கற்றுக் கொண்டிருக்கிறார். இவர் ஒவ்வொன்றையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வதால் தான் அதில் உச்சம் தொடுகிறார் என்பது புரிந்தது, அவரது பேச்சிலிருந்து.
இவர் ஒரு ‘‘மிமிக்ரி’’ ஆர்ட்டிஸ்ட் என்பது அனைவரும் அறிந்ததே. நிகழ்ச்சியில் கமலஹாசனைப் போலவே பேசிக்காட்டி அசத்தினார். (பார்வையாளர்களின் – நேயர் விருப்பம்)
லக்ஷ்மண் ஸ்ருதியின் 200, 2000 நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டிய கமல்ஹாசன், 5000–வது நிகழ்ச்சி நேரத்தில் வடபழனி 100 அடி சாலையில் ‘லக்ஷ்மண் ஸ்ருதி’ இசைக்கருவியின் விற்பனை ஷோரூமைத் திறந்து வைத்தார்.
கல்லூரியில் படிக்கும்போது இசைக்குழு ஆரம்பித்து முட்டி மோதி முன்வந்திருக்கிறார். 1987ல் இவரும் இவரது இரட்டை சகோதரர் ராமுவும் சேர்ந்து ஆரம்பித்த இசைக்குழு இன்று பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கிறது. இவர் சொன்ன நம்ப முடியாத ஒரு விஷயம்: “சங்கீதம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, என் நாற்பத்தைந்து வயதில் தான் சங்கீதம் முறைப்படி கற்றுக் கொண்டேன்!” என்பது.
36 மணி நேர விருந்து:
உலக சாதனை
1994ல் இடைவிடாது 36 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி உலகசாதனை புரிந்திருக்கிறார். அதைப்பற்றிக் குறிப்பிடும்போது “நான் தேர்ந்தெடுத்த துறை என் அப்பாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் இந்த உலகசாதனைக்கு இடையூறு வந்துவிடக் கூடாதே, கரண்ட் போய்விட்டால் கஷ்டமே என்று ஜெனரேட்டர் மற்றும் மின் இணைப்புகள் இருக்கும் பகுதியிலேயே அந்த 36 மணி நேரமும் தவம் போல் உட்கார்ந்திருந்தார்!” என்று சொல்லும் போது நெகிழ்ந்து போனார் லக்ஷ்மண்.
முதன் முதலாக ஸ்டண்ட் யூனிட் உறுப்பினர் கார்டு எடுக்கவும், இசைக்குழு தொடங்குவதற்கும் தன் நகைகளை அடகு வைத்துக் காசு கொடுத்து நம்பிக்கையோடு ஊக்குவித்த தாய்க்கு உணர்ச்சிப் பெருக்கோடு நன்றி கூறினார்.

பிரான்சில் கே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஆகிய இரண்டு இமயங்களையும் ஒரே மேடையில் பாட வைத்தது வாழ்வில் மறக்க முடியாதது என்றார். இவர் இசைக் குழுவில் பாடாத இசைப் பிரபலங்களே இல்லை. எஸ்.ஜானகி அம்மாவுடன் இணைந்து ஏராளமான இசை நிகழ்ச்சிகள் செய்ததையும், ‘‘மன்மதராசா’’ பாடிய தன் மனைவி மாலதியைப் புகழ்ந்ததையும் பெருமிதத்தோடு நினைவு கூர்ந்தார்.
இலக்கை மட்டுமே பாரு
‘‘ஓட்டப்பந்தயத்தில் நீ ஓடும்போது இலக்கை மட்டுமே பாரு! உனக்குப் பின்னாலும் முன்னாலும் ஓடும் யாரையும் பார்க்காதே! நீ திரும்பும் அந்த நொடியில் உன் கவனம் சிதறும்! அந்த இடைவெளியில் மற்றவர்கள் ஜெயித்து விடுவார்கள்! இதைத்தான் நான் கடைப்பிடிக்கிறேன். எனக்குப் போட்டியென்று யாரையும் நினைப்பதில்லை. அவர்களிடம் உள்ள நல்லது ஒவ்வொன்றையும் நான் கிரகித்து என் இசைக்குழுவில் அதைச் சேர்க்கிறேன்! அவ்வளவே’’ என்றார். இவரது வெற்றிக்குக் காரணமாக இவர் சொன்ன விஷயம் மனதைக் கவர்ந்தது. எத்தனை உன்னதமான விஷயம்…?!
![]()





