செய்திகள்

தி.மு.க.வில் இணைந்த விஜய்யின் முன்னாள் செயலாளர் பி.டி. செல்வகுமார்

Makkal Kural Official

சென்னை, டிச.11:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முன்னாள் செயலாளர் பி.டி.செல்வகுமார், தி.மு.க.வில் இன்று இணைந்தார்.

சென்னையில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவர் நடத்தி வந்த கலப்பை மக்கள் இயக்கத்தை தி.மு.க.வில் இணைத்தார். அவருடன் அதன் நிர்வாகிகள் அனைவரும் தி.மு.க.வில் இணைந்தனர்.

விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து பணியாற்றிய செல்வகுமார், பின்னர் விஜய்யின் மேலாளர் ஆனார். பந்தா பரமசிவம், ஒன்பதுல குரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள செல்வகுமார், புலி, ஜெயில் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.விஜய் நடிப்பில் வெளியான வசீகரா முதல் காவலன் திரைப்படம் வரை அனைத்துப் படங்களுக்கும் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இது தவிர இவர், ’கோயமுத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் விஜய்யுடன் நடித்தும் உள்ளார். விஜய் மக்கள் இயக்கத்திலும் தொடக்க காலம் முதல் பணியாற்றியுள்ள செல்வகுமார், பின்னர் கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார்.

செல்வகுமார் தி.மு.க.வில் இணைந்தது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று காலை ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனத் தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு பள்ளிக் கூடங்களுக்கு வகுப்பறைகள் மற்றும் கலை அரங்கங்களை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மக்கள் சேவகரும் – “தென் மாவட்டங்களில் சிறந்த கல்வி நன்கொடையாளர்” விருது பெற்றர். இவர் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ரெ.மகேஷ், ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக வந்துள்ளவர்களால் எங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விஜய்யின் மக்கள் இயக்கத்திற்கு தூணாக இருந்தேன். விஜய்யின் ரசிகர் மன்றத்திற்கு தவெக.வில் முக்கியத்துவம் இல்லை. அதனால், முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க.வில் இணைந்து மக்கள் பணியாற்றும் வகையில் கட்சியில் இணைந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் தவெகவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார். அவரைத் தொடர்ந்து திமுக, மதிமுக, அதிமுக என பல கட்சிகளில் வலம் வந்த நாஞ்சில் சம்பத் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *