சென்னை, டிச.26-
ஒரேநாளில் அடுத்தடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்த எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் குருபூஜையில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை அவர்களுக்கு வழங்கினார்.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இருப்பினும், தே.மு.தி.க. இதுவரையிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை.
வருகிற ஜனவரி 9-ந் தேதி கடலூரில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட உள்ளார்.

இந்த நிலையில், தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் நேற்று ஒரே நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகிய 2 பேரையும் தனித்தனியாக சந்தித்து பேசினார்.
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு குருபூஜை விழா வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் முதலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினார்.
அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து விஜயகாந்தின் குருபூஜை விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார். இந்த சந்திப்புகளின்போது தே.மு.தி.க. தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி உடன் இருந்தார். இதேபோல தமிழக பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் விஜயகாந்த் குருபூஜையில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை வழங்கப்படுகிறது.
![]()





