சென்னை, ஜூலை 31–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து நலம் விசாரித்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், 3 நாட்கள் டாக்டர்களின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். முதலமைச்சரின் சகோதரர் மு.க.முத்து மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, தே.மு.தி.க. நிர்வாகிகள் சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இந்த சந்திப்பிற்கு பின் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:– 100 சதவீதம் மரியாதை நிமித்தமாகவும், உடல்நிலை குறித்து விசாரிக்கவுமோ முதல்வரை சந்தித்தேன். கலைஞருக்கும், கேப்டனுக்கும் இடையேயான பழக்கம் நெடுங்காலமாக இருந்தது. குடும்பம், நட்பு ரீதியாக அவரின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளதால் தான் முதலமைச்சரை சந்தித்து உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தேன்.
ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் தே.மு.தி.க.வின் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. 2026ம் ஆண்டு ஜனவரி 9-ல் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாடு மற்றும் கட்சியை வலுப்படுத்துவதே தற்போதைய நோக்ககமாக உள்ளது. யாருடன் யார் கூட்டணி என தற்போது கூற முடியாது. இன்னும் நேரம் உள்ளதால் சரியான நேரத்தில் அறிவிப்போம் என்றார்.
இதனிடையே நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி என பிரேமலதாவை நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
ஓ.பி.எஸ். சந்திப்பு
சென்னை அடையாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து உள்ளார். முதலமைச்சரை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். சுமார் 2 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.
![]()





