செய்திகள்

ஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் அனைத்து நாடுகளுக்கும் 500% வரி : இந்தியாவுக்கு புதிய சிக்கல்

Makkal Kural Official

மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன், ஜன. 8–

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இது, இந்தியாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும். இதற்கிடையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அடுத்த வாரமே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து எச்சரிகை விடுத்து வருகிறார். எச்சரிக்கையை மீறி கொள்முதல் செய்ததால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50% வரி விதித்தார்.

சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், இந்தியா தன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம், ரஷியாவிடம் தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் 500% வரி விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அதில் தெரிவித்திருப்பதாவது:

‘‘அதிபர் டிரம்ப்புடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மிகவும் பயனுள்ள ஒரு சந்திப்பு நடைபெற்றது. நானும் செனட்டர் ப்ளூமென்டாலும் பலருடன் இணைந்து மாதக் கணக்கில் பணியாற்றி வந்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைன் அமைதிக்காக இறங்கி வரும் நேரத்தில், புதின் வெறு வாய் வார்த்தைகளை மட்டும் பேசி, அப்பாவி மக்களைக் கொன்று வருவதால், சரியான நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புதினின் போர் இயந்திரத்துக்கு எரிபொருளாக அமையும் மலிவான ரஷிய எண்ணெய்யை வாங்கும் நாடுகளை தண்டிப்பதற்கு இந்த மசோதா டிரம்ப்புக்கு அதிகாரம் அளிக்கும்.

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைக் கட்டாயப்படுத்துவதற்கு இந்த மசோதா டிரம்ப்புக்கு மகத்தான செல்வாக்கை வழங்கும். அடுத்த வாரமே இரு கட்சிகளின் வலுவான ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறேன்’’.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

66 சர்வதேச அமைப்புகளில்

இருந்து அமெரிக்கா விலகல்

இதனிடையே 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஒருஅறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘‘அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படும் 35 ஐ.நா. அல்லாத குழுக்கள் மற்றும் 31 ஐ.நா அமைப்புகளுக்கு நிதி வழங்குவதையும், அவற்றுடன் தொடர்பு கொள்வதையும் நிறுத்தும் படி அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம் உள்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு இனி சேவை செய்யாத அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தது. ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம், இந்தியாவும் பிரான்சும் இணைந்து வழிநடத்தும் தூய்மையான எரிசக்தி முன்னெடுப்பான சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், பருவ நிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு உள்பட 66 அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளது’’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *