செய்திகள்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

Makkal Kural Official

வேளாங்கண்ணி, ஆக. 30-–

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதாவின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறித்த வண்ணக்கொடி பேராலய முகப்பிலிருந்து மாலை 5.45 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

பேராலய வளாகம், கடற்கரைசாலை, ஆரியநாட்டுத்தெரு வழியாக எடுத்து செல்லப்பட்ட கொடி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் வேளாங்கண்ணி பேராலயத்தின் வடக்கு புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தஞ்சை ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து மாலை 6.40 மணிக்கு ஏற்றி வைத்தார். அப்போது வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது.

பின்னர் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தலைமையில் திருத்தல கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இரவு 8 மணிக்கு மாதா திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் ஜெபமாலை நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. இரவு 8 மணிக்கு பேராலய முகப்பில் தேர்பவனி நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.15 மணிக்கு நடக்கிறது.

தொடர்ந்து புதுவை–கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றப்படும் 8-ந் தேதி(திங்கட்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் நடக்கிறது.

கொடியேற்ற விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ்,திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜோஷிநிர்மல்குமார், தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், அமைச்சர் மனோதங்கராஜ், செல்வராசு எம்.பி., இனிகோஇருதயராஜ் எம்.எல்.ஏ., பேராலய அதிபர் இருதயராஜ், பங்குதந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தை அந்தோணிபெர்டினான்டோ, நிர்வாக தந்தை பரிசுத்தராஜ், விடுதி பொறுப்பாளர் ஆரோஜேசுராஜ்,

பேரூராட்சிதலைவர் டயானா ஷர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுலுவலர் பொன்னுசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட் அற்புதராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *