சென்னை, ஜன.23-
வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தொிவித்துள்ளனர்.
சென்னையில் கடற்கரை–வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. 5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. இதில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியிருந்த ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிவு பெறாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்த பிரச்சினைக்கு கோர்ட்டு மூலம் தீர்வு காணப்பட்டு, கடந்த 2024-ம் ஆண்டு கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கியது. அப்போது, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரெயில் பாலம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இங்கு பாலத்தை மீண்டும் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், எப்போது இந்த பாதையில் ரெயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே சார்பில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டு தண்டவாளங்கள் உறுதி தன்மை உள்ளிட்ட சோதனைகளை மேற்கொள்வார். ரெயில் இயக்க பாதுகாப்பு கமிஷனர் அனுமதி வழங்கிய பின்பு இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும். விரைவில் பாதுகாப்பு கமிஷனர் இந்த வழித்தடத்தில் சோதனை மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் இந்த வழித்தடத்தில் பறக்கும் ரெயில் சேவை தொடங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது’ என்றனர்.
![]()





