வேலூர், டிச. 17–
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார்.
நேற்று முதல் 22–ந்தேதி வரை தமிழ்நாடு, கேரளம், தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய இடங்களுக்கு ஜனாதிபதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் ஸ்ரீபுரத்துக்கு ஜனாதிபதி இன்று காலை 11.20 மணிக்கு வருகை தந்தார். தங்கக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டில் வந்திறங்கிய ஜனாதிபதியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ஸ்ரீ நாராயணி அம்மன், 1,800 கிலோ வெள்ளியால் அமைக்கப்பட்ட விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாள் ஆகிய கோவில்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார். அங்கு சுமார் ரூ. 5 கோடியில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்து, மரங்களை நட்டார்.
ஜனாதிபதி வருகையையொட்டி இன்று மதியம் 12.30 மணி வரை நாராயணி கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ட்ரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபுரம் தங்கக்கோயில் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் 2 அடுக்கு பாதுகாப்புடன் ஸ்ரீபுரம் பகுதி முழுவதும் சுமார் 1000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
![]()





