செய்திகள்

வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மா 50-வது ஜெயந்தி விழா: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரை

Makkal Kural Official

வேலூர், ஜன. 4:

ஸ்ரீபுரத்தை உருவாக்கி, தங்ககோயிலை உலகிற்கு வழங்கிய ஸ்ரீ சக்தி அம்மாவின் 50–வது ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த பொன்விழா ஜெயந்தியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சக்தி அம்மாவுக்கு மறியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார்.

அரியூர் மலைக்கோடியில், ஸ்ரீ சக்தி அம்மா தன் தவ வலிமையால் நாராயணி பீடத்தை ஏற்படுத்தி நாராயணிக்கு கோயில் கட்டி சிறப்பித்தார். இந்த நிலையில், தெய்வத்தின் கட்டளையினால் சக்தி அம்மா தெய்வத்தின் துணையோடு ஸ்ரீபுரத்தை தோற்றுவித்து, அதில் 1700 கிலோ தங்கத்தினால் தங்க கோயிலை கட்டி உலகிற்கு வழங்கி உலகையே காத்து பல நற்பணிகளை செய்து பக்தர்கள் மனதில் குடிகொண்டு விட்டார். இன்று பக்த கோடிகள் சக்தி அம்மாவின் 50-வது பொன்விழா ஜெயந்தியை மிகச் சிறப்பாக கொண்டாடினர்.

ஸ்ரீசக்தி அம்மாவின் 50-வது ஆண்டு பிறப்பதையொட்டி, ராராயணி பீடத்தின் வாயிலாக பக்தர்கள் கடந்த சிலவாரங்களாக பல நற்பணிகளை மேற்கொண்டு சிறப்பித்தனர். அந்த வகையில் ஏழை எளியோர்களுக்கு வஸ்திர தானம், ரத்த தானம், நலத்திட்டங்கள், வழங்கப்பட்டது. பக்த சபாவை சேர்ந்த பக்தர்கள் விழா ஏற்பாட்டை செய்து வந்தனர். சக்தி அம்மாவின் பிறந்தநாளையொட்டி ஸ்ரீபுரமே விழா கோலம் பூண்டு இருந்தது.

சக்தி அம்மாவின் பிறந்தநாளான ஜனவரி 3– ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பிறகு ஆயுஷ் ஹோமம் மற்றும் ஸ்ரீ நாராயணி மூலம் மந்தர ஹோமம், பூரணாஹாதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 10.30 மணியளவில் சக்தி அம்மா விழா மேடைக்கு வந்தார். அவருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர். விழாவின் சிறப்பு விருந்தினராக துணை ஜனாபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். அவருக்கு விழாக் குழுவின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அமைச்சர் எல்.முருகன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தொடர்சியாக சக்தி அம்மாவுக்கு பாத பூஜை, மலர் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதகிருஷ்ணன் சக்தி அம்மாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார். விழாவில் அவர் பேசியதாவது:–-

எப்போதெல்லாம் நான் வேலூருக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் சக்தி அம்மாவைச் சந்திக்கிற பாக்கியமும் அம்மாவினுடைய ஆசீர்வாதத்தைப் பெறுகின்ற பாக்கியமும் எனக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது. முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல்கலாம், ராம்நாத் கோவிந்த் மற்றும் தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரும் இங்கு வருகை தந்துள்ளனர். இறை சக்திக்கு மீறிய சக்தி உலகில் ஒன்றுமில்லை. ஆன்மிக சக்தியையும் யாராலும் அழிக்க முடியாது.

அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் சக்தி அம்மாவின் உயரிய சிந்தனை. பக்தியுடன் தர்ம நெறிகளையும் மக்களுக்கு வழங்குகிறார். வசதி இல்லாத கோவில்களின் கும்பாபிஷேகத்திற்கு உதவுவது, தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் குடிநீர் வழங்குவது என ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் தர்மசேவைகள் நீண்டு கொண்டே போகின்றன.

கொரோனா காலக்கட்டத்தில் பலருக்கும், இலங்கையில் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் உதவிகள் பல செய்துள்ளார். அன்பே சிவம் என திருமூலர் கூறினார். இன்றைக்கு சக்தி அம்மாவின் மூலமாகவும் அது நம்முடைய மண்ணிலே தழைத்திருக்கிறது.

இவ்வாறு அனைவரிடமும் அன்பு செழித்து, அன்பே சிவம் என்ற உலகத்திற்குப் பறைசாற்றும் ஆன்மிகச் சித்தராய் அறம் வளர்க்கும் செல்வனாகிய சக்தி அம்மா அருளாசி வழங்குவதைக் கலிகாலத்தின் பெருந்தவமாய் நான் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சக்திஅம்மா பேசுகையில், எதெல்லாம் சாத்தியமில்லையோ, அது எல்லாத்தையும் அம்மா சாத்தியமாக்கி உள்ளார். அதற்கு அம்மா மீது நீங்கள் வைத்த அன்பு மட்டும் தான் காரணம். இந்த மங்களகரமான நாளில், புது ஆண்டில் அம்மாவோட குழந்தைகள் அத்தனை பேரும் ஆரோக்கியத்துடனும், ஆனந்தத்துடனும் சந்தோஷமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி அடைய பக்தி வேண்டும். பக்தி கொடுத்தால் அம்மாவின் அன்பு கிடைக்கும். வாழ்க்கையில் வெற்றி அடைய முயற்சி, திறமையைத் தாண்டி தெய்வத்தின் அருள்வேண்டும். அருள் இருந்தால் எல்லாமே கிடைக்கும் என்றார்.

பின்னர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சக்தி அம்மா, கோமாதா சிலை மற்றும் தங்கக்கோவில் மாதிரியை நினைவு பரிசாக வழங்கினார். தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் சக்திஅம்மாவுக்கு ஆரத்தி காண்பித்தார். பின்னர் நிகழ்ச்சியில் சக்தி அம்மாவுக்கு மலர் அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர் என்.பாலாஜி, அறங்காவலர் சவுந்தரராஜன், நாராயணி பீட மேலாளர் சம்பத், பக்தர் ரூட்ஸ் ராமசாமி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கலவை சச்சிதானந்தசுவாமிகள் மற்றும் பீடாதிபதிகள், ஜெய் ஸ்ரீராம் சேவாசங்க தலைவர் டி.கே.டி.ஜி. சீனிவாசன், அமைப்பாளர் ஆர்.இளங்கோவன், தொழிலதிபர்கள், பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *