சென்னை, ஜன. 27:
‘வாழ்க்கையிலும், தொழிலிலும் வாய்ப்புகளை அடையாளம் கண்டு தீவிரமாக இறங்கி எதிர்கொள்பவர்களே வெற்றி பெறுகின்றனர்’ என கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் – மேலாண் இயக்குநர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று விஐடியில் சந்தித்து சங்கத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து விவாதிப்பது வாடிக்கை. அதன்படி 31-–வது ஆண்டு சந்திப்பு நிகழ்வு வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் பங்கேற்று இருந்தனர்.இதில் ‘கவின்கேர்’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சி.கே.ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நல் ஆலோசனைகளை வழங்கினார்.
செயற்கை நுண்ணறிவு
நான் கடந்த 18 மாதங்களாக தீவிரமாக செயற்கை நுண்ணறிவைப் (ஏ.ஐ) நான் பயன்படுத்தி வருகிறேன். ஏ.ஐ. தவறுகள் செய்யும்,அதை சவால் செய்து வாதிட வேண்டும். பேச்சு மூலம் ஏ.ஐ. உடன் உரையாடும் போது கவனம் அதிகரிக்கிறது.எங்கள் நிறுவனத்தில் அனைத்து கொள்முதல் ஆர்டரும் ஏ.ஐ. அங்கீகாரம் இல்லாமல் செல்லாது. ஆக ஏ.ஐ. மிகப்பெரிய மதிப்பைச் சேர்க்கிறது.சிக்கல்களைத் தீர்ப்பது,வாய்ப்புகளை உருவாக்குவது, செயல்முறைகளை உருவாக்குவது, ஏ.ஐ-யைப் பயன்படுத்துவது, மதிப்புகளைப் பேணுவது ஆகியவை வெற்றிக்கான அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும்.
இவ்வாறு சி.கே.ரங்கநாதன் பேசினார்.
வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்துதலைமையுரையில் கூறியதாவது:–
‘‘இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு,இங்கு சாதி, மதம், மொழி, மாநிலம் என்று பார்ப்பதில்லை. உலகின் சிறந்த நிறுவனங்களுடன் போட்டியிட விரும்புகின்றோம். நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களிப்பை தர நாம் முனைகிறோம்.
உதாரணமாக 22 லட்சம் மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பைப் படிக்க விரும்புகின்றனர். ஆனால் 1.25 முதல் 1.28 லட்சம் மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வில் 8 முதல் 9 லட்சம் பேர் தகுதி பெறுகின்றனர்.ஆனால், மாணவர் சேர்க்கைக்குப் பிறகு, ஒவ்வோர் ஆண்டும் 2,000 முதல் 3,000 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன,அதே எண்ணிக்கையில் எம்.டி. மற்றும் எம்.எஸ் இடங்களும் உள்ளன.
மருத்துவப் படிப்புகளை பொறுத்தவரை மாநில அரசு, மத்திய அரசு, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேசிய மருத்துவ கவுன்சில் என அனைவரின் தலையீடு உள்ளது. இறுதியில் காலி இடங்கள் ஏற்படுகின்றன. இதேநிலை தான் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி-களிலும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
கல்வி +சுகாதாரம்
கவனம் அவசியம்
எனவே, முன்னாள் மாணவர்கள் எங்கிருந்தாலும் சமூகத்தை வழிநடத்த முன் வர வேண்டும். இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார பலமிக்க நாடாக மாறி உள்ளது.
வடஆற்காடு மாவட்டம் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளது. இங்கு வசிக்கும் 75 லட்சம் மக்களின் நிலையை மாற்ற அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளையைத் தொடங்கி அனைவரும் உயர்கல்வி பெற உதவி செய்து வருகிறோம்.
நிகழாண்டில் அறக்கட்டளைக்கு ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளமான ரூ.96 லட்சத்தை நிதியாக வழங்கியுள்ளனர். இது நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது என்றார் அவர்.
சங்கர் விசுவநாதன்
நிகழ்வில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, முன்னாள் மாணவர் சங்க இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
![]()





