செய்திகள்

வேலூரில் பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி: கலெக்டர் சுப்புலெட்சுமி திறந்தார்

Makkal Kural Official

வேலூர், டிச. 30:

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், பூம்புகார் விற்பனை நிலையம் நடத்தும் கைவினை பொருட்கள் கண்காட்சியை வேலூர் நகர அரங்கில் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம், லட்சுமணசாமி டவுன் ஹால், டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் என்ற இடத்தில் பூம்புகார் விற்பனை நிலையம் சேலம் நடத்தும் “கைவினை கண்காட்சி” என்ற சிறப்பு கைவினைப் பொருட்கள், கைத்தறி, துணி வகைகள், அலங்கார நகைகள் கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சி இன்று முதல் 11.1.2026 வரை (ஞாயிறு உட்பட) நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக அனைத்து கைவினை கலைப் பொருட்களும் இடம் பெற்றுள்ளன. சுவாமிமலை பஞ்சலோக சிலைகள், நாச்சியார்கோவில் பித்தளை குத்து விளக்குகள், பித்தளை கலை பொருட்கள், தஞ்சாவூர் கலைதட்டுகள், தஞ்சாவூர் கலை ஓவியங்கள், வெண்மர சிற்பங்கள், சந்தன மரச்சிற்பங்கள், சந்தனக் கட்டைகள், நூக்கமரம் பொருட்கள், நினைவு பரிசுகள், பல வித விளக்குகள், கருப்பு மற்றும் வெள்ளை உலோக பொருட்கள், சென்ன பட்டனா பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், பயன்பாட்டு கைவினைப் பொருட்கள், கற்சிற்பங்கள் மற்றும் ஏராளமான கைவினைப் பொருட்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன.

மேலும் கைத்தறி ரகங்களில் டாப்ஸ் வகைகள், பேன்சி சுடிதார் வகைகள், கலம் காரி பைகள், வண்ணம் அச்சிடப்பட்ட புடவைகள், பேன்சி சேலைகள், கைப்பைகள், படுக்கை விரிப்புகள் போன்ற எண்ணற்ற வகையில் ஜவுளிகள் இடம் பெற்றுள்ளன.

முத்து, பவளம் மற்றும் நவரத்தின மாலைகள், ராசிக்கற்கள், ஸ்படிக மணிமாலைகள், ருத்தராட்ச மணி மாலைகள், பஞ்சலோக மோதிரங்கள், வளையல்கள், செம்பு காப்பு, கோமதி சக்கரம், கருங்காலி மாலைகள், பஞ்சலோக நகைகள், அகர் பத்திகள், வாசனைத் திரவயங்கள் போன்ற பல வித பூஜை பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

குறைந்தபட்சமாக ரூ.50 முதல் 1.52 லட்சம் வரையிலான கைவினை பொருட்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சியில் சுமார் ரூ. 10 இலட்சம் வரை விற்பனை இலக்கு எதிர்பார்க்கப்படுகிறது

அனைத்து பொருட்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். அனைத்து கடன் (Debit & Credit) அட்டைகளுக்கும் எவ்வித சேவைக் கட்டணமும் இல்லை மற்றும் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் மூலமும் பண பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், 2வது மண்டலக்குழுத்தலைவர் ஆர்.நரேந்திரன், மேலாளர் நரேந்திரபோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *