செய்திகள்

வேர்க்கடலை உரித்தல், பூச்சரம் தொடுத்தல் போட்டிகளோடு டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் குதூகலப் பொங்கல் விழா

Makkal Kural Official

சென்னை, ஜன.13–

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவ கல்லூரியில் ‘தைத்திருநாள் பொங்கல் விழா’ மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அதிகாலையில் புனிதமான ‘கோ-பூஜை’யுடன் பொங்கல் விழா தொடங்கியது. தொடர்ந்து காலை 9 மணியளவில் கலை மற்றும் கலாச்சாரப் போட்டிகள் தொடங்கின. கல்லூரி வளாகத்தில் அச்சு அசலாக அமைக்கப்பட்டிருந்த மாதிரி கிராமம் அனைவரையும் ஈர்த்தது. சிலம்பாட்டத்தின் வேகம், உறியடியின் உத்வேகம், கண்கவர் ரங்கோலி கோலங்கள் எனத் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள் மாணவர்களால் மீட்டெடுக்கப்பட்டன. இவை தவிர, வேர்க்கடலை உரித்தல், பூச்சரம் தொடுத்தல் போன்ற போட்டிகள் மூலம் மாணவர்கள் கிராமிய வாழ்வியலை உணர்ந்தனர்.

சிறப்புப்பட்டிமன்றம்

மதிய அமர்வில் பிரபல நகைச்சுவை பேச்சாளர் கவிஞர் மு.ராமலிங்கம் தலைமையில் சுவாரஸ்யமான பட்டிமன்றம் நடைபெற்றது. “தமிழர் திருவிழாக்கள்: பண்பாட்டுப் பாதுகாப்பின் அரணா? அல்லது பொழுதுபோக்கின் ஊற்றா?” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விவாதத்தில், மாணவர்கள் ஆழமான கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியில் பேசிய கவிஞர் ராமலிங்கம், “இத்தகைய விழாக்கள் தமிழ் அடையாளத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் அடித்தளங்கள்” என்று குறிப்பிட்டார்.

முதல்வர் உரை

கல்லூரி முதல்வர் சேது. சந்தோஷ் பாபு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசுகையில், “இயற்கையைப் பேணுவதும், சமூக நல்லிணக்கமுமே பொங்கல் விழாவின் அடிப்படை. இந்த விழுமியங்களை மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு கல்வி நிறுவனம் அறிவை மட்டுமல்ல, பண்பாட்டையும், சமூகப் பொறுப்பையும் வளர்க்க வேண்டிய பொறுப்பை ஏந்தியுள்ளது. இத்தகைய விழாக்கள் மூலம் மாணவர்கள் தங்கள் வேர்களை உணர்ந்து, மரபும் முன்னேற்றமும் இணைந்து பயணிக்க வேண்டிய அவசியத்தை புரிந்துகொள்கிறார்கள் என்றார்.

இயற்கையுடன் இணைந்து வாழ்தல், நிலைத்த வளர்ச்சி, நன்றியுணர்வு ஆகிய உயரிய மதிப்புகளை பொங்கல் நமக்கு கற்றுத் தருகிறது. இம்மதிப்புகள் இன்றைய காலகட்டத்திலும் மிக முக்கியமானவை” என்றார் அவர்.

கல்லூரிச் செயலர் அசோக்குமார் முந்த்ரா, தமிழ்த் துறைத் தலைவர் ப. முருகன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். முடிவில் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *