செய்திகள்

வேந்தர் விசுவநாதன் தலைமையில் விஐடியில் ‘பொங்கல் விழா’ கோலாகலம்: கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள்

Makkal Kural Official

சென்னை, ஜன. 9–

விஐடி சென்னையில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். வி.ஐ.டியின் துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் திரைப்பட நடிகர் ராமராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு பரிவட்டம் கட்டி கரும்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருந்தினர்கள் முன்னிலையில் பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. அப்போது அனைவரும் “பொங்கலோ பொங்கலோ” “பொங்கலோ பொங்கலோ” என்று மகிழ்ச்சி பொங்க கோஷங்களை எழுப்பினர்.

நாட்டுப்புற கலைஞர்களால் தேவராட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் அரகேற்றப்பட்டது. மேலும், பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளை மாடு உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தது. கிராங்களில் பொங்கல் கொண்டாடப்படுவதை நினைவு கூறும் வகையில் தத்ரூபமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

விழாவில், விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் பேசியதாவது:

உலகம் முழுவதும் 160 நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதில், 100 நாடுகளுக்கு மேல் குடியுரிமையும் பெற்றிருக்கிறார்கள். தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுகின்ற விழா பொங்கல் விழா.

சாதி, மதம், கட்சி, மாநிலம் என்று எதுவும் பாராமல் பொங்கல் என்றால் ஒன்றிணைந்திட வேண்டும். எல்லா நாட்டினராலும், எல்லா மதத்தினராலும், எல்லா மொழியினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பெருமைக்குரிய நூல் திருக்குறள். அந்த நூல் தமிழருக்கு சொந்தனமானது. இவ்வாறு பல பெருமைகளை பெற்றவர்கள் தமிழர்கள்.

தமிழர்கள் நல்லவர்களாகவும் இருக்க வேண்டும், வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். நல்லவர்களாக இருப்பதற்கு கல்வி கற்று திருக்குறளைப் படித்தாலே போதும். வல்லவர்களாக இருப்பதற்கு கல்வி, நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும். கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

கல்வி வீட்டுக்கும் தேவை, நாட்டுக்கும் தேவை. மாணவர்கள் சிறப்பாகக் கல்வியை கற்றால் நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் ராமராஜன்

சிறப்பு விருந்தினர் நடிகர் ராமராஜன் பேசுகையில்,“ விஐடி சென்னையில் நடந்த பொங்கல் விழா பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் சிறப்பாக அமைந்தது. என்னை பொறுத்தவரையில் எத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளோம் என்பது முக்கியமில்லை. எத்தனை பேர் மனதில் இருக்கிறாம் என்பது தான் முக்கியம். திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல கருத்துக்களை பரப்ப வேண்டும். அதன் மூலம், சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும். மாணவர்கள் படித்து முடித்து வேலைக்கு சென்ற பிறகு, தங்களுடைய பெற்றோரை கவனித்து கொள்ள வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில்,விஐடி சென்னையின் இணை துணை வேந்தர் டி.தியாகராஜன், இயக்குநர் சத்யநாராயணன், கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *