செய்திகள்

வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் ரூ. 15,000 உயர்ந்து கிலோ ரூ. 3 லட்சத்தைக் கடந்தது

Makkal Kural Official

சென்னை, ஜன. 14–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெள்ளி விலை வரலாற்றில் இல்லாத உச்சமாக கிலோவுக்கு ரூ15,000 உயர்ந்து முதல்முறையாக ரூ. 3 லட்சத்தைக் கடந்தது.

தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. கடந்த மாதம் 28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் 1,06,240-க்கும் விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை தொட்டது.

வெள்ளி விலை

வரலாறு காணாத உச்சம்

தங்கத்துடன் போட்டிபோடும் வெள்ளி விலை நேற்றைப் போலவே இன்றும் ஒரு கிலோவுக்கு ரூ. 15,000 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ. 307-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.15,000-ம் உயர்ந்து ரூ.3,07,000 என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளி விலை ரூ.30,000 உயர்ந்திருக்கிறது. உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம், அமெரிக்காவின் வரிவிதிப்பு, ஈரான் போர்ப்பதற்றம் உள்ளிட்டவற்றால் தங்கம் வெள்ளி ஆகியவற்றின் மீதான முதலீடு அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் மற்றும் மக்கள் மீண்டும் கலக்கமடைந்துள்ளனர்.

மேலும், மார்கழி மாதம் முடிந்து தை மாதப் பிறப்பையொட்டி சுப விசேஷங்களால் மீண்டும் தங்கம் விற்பனை அதிகரிக்கக் கூடும் என்றும், இதனால் தொடர்ந்து விலையேற்றம் இருக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *