நாகர்கோவில், ஜூலை. 4-
போர் சூழ்நிலை காரணமாக ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என வெளியுறவுத்துறை இணை செயலாளரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை மனு கொடுத்தார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று டெல்லியில் வெளியுறவு துறை இணை செயலாளர் ஆனந்த் பிரகாஷை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஈரான் நாட்டின் ஹோர்மொச்கன் மாகாணத்தில் கிஷ் தீவுகள் உள்ளன. மீன்பிடி தொழிலுக்கு பெயர் போன இந்த தீவில் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.
ஈரான்– இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் மூண்ட நிலையில் இவர்களது தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்பொழுது போர் முடிந்த போதிலும் கிஷ் தீவில் உள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாமல் உள்ளனர். அங்குள்ள சூழல் இன்னமும் பதற்றமான நிலையில் இருப்பதால் மீனவர்கள் அவர்களது படகுகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கி உள்ளனர்.
இவர்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு வழி இல்லாமல் தவிப்பதாக தங்களது நிலையை எடுத்து கூறியுள்ளனர். இந்த மீனவர்களுக்கு அனைத்து வகை உதவிகளையும் அரசு உடனே செய்ய வேண்டும். மேலும் இந்த மீனவர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()





