கராகஸ், ஜன. 5:
வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்தது. தொடர்ந்து அவர்கள் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸை நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அரசின் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்ட ரோட்ரிகஸ் இன்ஸ்டாகிராமில் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:“உலகிற்கும், அமெரிக்காவுக்கும் வெனிசுவேலாவில் இருந்து ஒரு செய்தி. வெனிசுவேலா அமைதியான வாழ்வுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்கிறது. எங்கள் நாடு வெளிப்புற அச்சுறுத்தல்கள் இல்லாமல் மரியாதையுடன், சர்வதேச ஒத்துழைப்புடன் வாழ ஆசைப்படுகிறது. ஒவ்வொரு நாட்டின் உள் அமைதியின் மூலம் உலக அமைதி கட்டமைக்கப்படுகிறது என்பதை நாங்கள் நம்புகிறோம்.
அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையே இறையாண்மை சமத்துவம் மற்றும் தலையீடு இல்லாத மரியாதைக்குரிய சர்வதேச உறவுகளை நோக்கி நகர்வதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். நீடித்த சமூக இணை வாழ்வை வலுப்படுத்த, சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பில் பகிரப்பட்ட வளர்ச்சியை நோக்கிய ஒத்துழைப்பு விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கத்தை எங்களுடன் இணைந்து செயல்பட அழைக்கிறோம். அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களே, எங்களின் பிராந்தியமும் மக்களும் அமைதி மற்றும் உரையாடலுக்கு தகுதியானவர்கள், போருக்கு அல்ல. வெனிசுலாவுக்கு அமைதி, வளர்ச்சி, இறையாண்மை மற்றும் எதிர்காலத்திற்கான உரிமை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே வெனிசுலாவில் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில், கியூபாவைச் சேர்ந்த 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அந்நாடு உறுதி செய்துள்ளது. வெனிசுலா அதிபராக மதுரோ பதவியேற்றது முதல் அவருக்கு கியூபா பாதுகாப்பு அளித்து வந்தது. ஆனால் எத்தனை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்ற தகவல் இல்லை. அவர்கள் நினைவாக இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
![]()





