செய்திகள்

வெனிசுலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்

Makkal Kural Official

கராகஸ், ஜன. 4:

வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நாடு கடத்தப்பட்ட அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, டிரம்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்தார்.

கராகஸ் – தென் அமெரிக்காவில் உள்ள நாடு வெனிசுலா. அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பகை நிலவி வருகிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் வற்புறுத்தி வந்தார். போதைப்பொருள் கடத்த வெனிசுலா உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அமெரிக்கா நேரடி நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியது. ‘ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர்’ எனப்படும் ‘தெற்கில் வேட்டை’ எனும் ராணுவ நடவடிக்கைக்கு அதிபர் உத்தரவிட்டார். இதை அமெரிக்காவின் கடற்படை செயல்படுத்தியது.

போதைப்பொருள் கடத்துவதாக சந்தேகத்தின்பேரில், கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பகுதிகளில் செல்லும் படகுகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதுவரை 35 படகு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. 115 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த மாதம் 29ம் தேதி போதை பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டது என கூறி, வெனிசுலாவின் படகு தளத்தை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. ஆளில்லா விமானம் மூலம் தாக்கி அழித்தது.

இதனிடையே தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற அமெரிக்கா திட்டமிடுவதாகவும், எண்ணெய் வளத்தை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் வெனிசுலா அதிபர் மதுரோ குற்றம்சாட்டி வந்தார். விரைவில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்த உத்தரவிடுவேன் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

வெனிசுலாவின் அரசியல் சூழலும் அதிபர் மதுரோவுக்கு எதிராக உள்ளது. அதிபர் மதுரோ மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டு உள்ளது. ‘2024 அதிபர் தேர்தலில் அவர் தோற்ற போதிலும், தேர்தல் கமிஷன் அவரை வெற்றி பெற்றவராக அறிவித்தது’ என அமெரிக்கா கருதுகிறது. உள்நாட்டிலும் மதுரோவுக்கு எதிர்ப்பு அதிகரித்து உள்ளது. அமெரிக்க வெளியுறவு கொள்கையின்படி மதுரோவை அவர்கள் அதிபராக ஏற்கவில்லை. எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கோன்சலேஸையே அதிபராக அங்கீகரித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் வெனிசுலா மீது அமெரிக்கா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. தலைநகர் கராகஸ் நகரில் அமெரிக்க போர் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்று குண்டுகளை வீசின. இதனால் வெனிசுலாவில் போர் பதற்றம் ஏற்பட்டது. முக்கிய ராணுவ தளத்திற்கு அருகே இத்தாக்குதல்கள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காரகாஸ் மட்டுமின்றி பல்வேறு மாகாணங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ரஷ்யா, கியூபா, ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்துள்ளன.

புரூக்ளின் சிறையில் அடைப்பு

இதற்கிடையே புளோரிடாவில் உள்ள தனது கிளப்பில் கடந்த 2 வாரங்களாக முகாமிட்டுள்ள டிரம்ப் வெனிசுலா தாக்குதல் செய்தியை சமூக வலைதளத்தில் பதிவிட்டு கூறியதாவது:– அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. வெனிசுலா அதிபர் மதுரோவும், அவருடைய மனைவி சிலியாவும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். அமெரிக்க ராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார். தற்போது அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது உண்மைதானா? இல்லை தவறான தகவலா? என சந்தேகமும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலா முழுவதும் பரபரப்பான சூழலில், அரசு தொலைக்காட்சியின் மூலம் அந்நாட்டு துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், “அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் எங்கே இருக்கின்றனர் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு எங்களுக்கு ஆதாரம் வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

புகைப்படம் வெளியீடு

இந்த நிலையில் இன்று வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அதிபர் டிரம்ப் முதலில் மதுரோவில் கைகள் கட்டப்பட்டு, கண்கள் மற்றும் காதுகள் மூடப்பட்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து டிரம்ப் கூறுகையில், சட்டவிரோதியான வெனிசுவேலா அதிபர் மதுரோவை நீதியின் முன் நிறுத்தியுள்ளோம். வெனிசுலாவில் பாதுகாப்பான அதிகார மாற்றம் ஏற்படும் வரை வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்க போகிறது. ஏற்கனவே அங்கு அமெரிக்கர்கள் இருக்கிறார்கள்.

எனவே, பாதுகாப்பான, முறையான அதிகார மாற்றத்தை மேற்கொள்ளும் வரை, நாங்கள்(அமெரிக்கா) அந்த நாட்டை நிர்வகிக்க போகிறோம். இந்த வெற்றிகரமான நடவடிக்கை, அமெரிக்க இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அல்லது அமெரிக்கர்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். வெனிசுவேலாவின் மக்களுக்கு அமைதி, சுதந்திரம் மற்றும் நீதி வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அமெரிக்க ஹெலிகாப்டர் எதிர்தரப்பால் தாக்கப்பட்டதாகவும், சில அமெரிக்க வீரர்கள் காயம் அடைந்ததாகவும், ஆனால் யாரும் கொல்லப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அதிபராக

டெல்சி நியமனம்

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த நிலையில் இடைக்கால அதிபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெனிசுலாவின் தற்போது இருக்கும் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்-ஐ இடைக்கால அதிபராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்தது. ”வெனிசுலாவின் ஒரே அதிபர் நிக்கோலஸ் மதுரோ மட்டும்தான். அவரை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் அமெரிக்கா விடுதலை செய்ய வேண்டும்” என இடைக்கால அதிபர் டெல்சி தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் எண்னெய், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை டெல்சி ரோட்ரிக்ஸ் கவனித்து வந்தார். வெனிசுலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது இணையதளத்தில், தாக்குதல் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.

வெனிசுலாவுக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே அங்கு இருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, டிரம்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “சுதந்திரம் மற்றும் நீதிக்காக உங்கள் துணிச்சலான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைக்கு வாழ்த்துக்கள், ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். உங்கள் தீர்க்கமான மன உறுதியையும், உங்கள் துணிச்சலான வீரர்களின் அற்புதமான செயலையும் நான் வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியர்களுக்கு

மத்திய அரசு அறிவுரை

வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, அந்த நாட்டிற்கு இந்தியர்கள் தேவையின்றி செல்ல வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மேலும் வெனிசுலாவில் இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஹேப்பி நியூ இயர்:

மதுரோ வாழ்த்து

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ நாடு கடத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.வெனிசுவேலா அதிபர் மதுரோவை அமெரிக்க படை கைது செய்து அழைத்துச் செல்லும்போது, அங்கிருந்தோருக்கு ஹேப்பி நியூ இயர் என்று மதுரோ வாழ்த்து தெரிவிக்கும் விடியோ வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *