செய்திகள்

வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

Makkal Kural Official

ஆஸ்லோ, அக்.11-

வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் பெயரில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மனித குலத்துக்குப் பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது.

இந்தாண்டுக்கான விருது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத்துவக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை நார்வே குழுவினர் நேற்று அறிவித்தனர்.

வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவித்தனர்.

வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதற்காக 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்ததாக நார்வே குழுவினர் தெரிவித்தனர்.

நார்வே பாராட்டு

உலகம் முழுக்க சர்வாதிகாரம் என்ற இருள் விலகிவரும் நிலையில், அதற்காக போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதே சிறப்பானதாக இருக்கும் என பரிசு அறிவித்த நார்வே குழுவினர் பாராட்டி உள்ளனர்.

யார் இவர்?

வெனிசுலா நாட்டின் பெண் போராளி மரியா கொரினா மச்சாடோ.

இவர் வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் முக்கிய அரசியல் வாதியாக திகழ்ந்து வருகிறார்.

இவர் வெனிசுலாவில் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடியவர்.

மக்களின் ஜனநாயக உரிமைகளை காப்பதற்கு குரல் கொடுத்துள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு தேர்தலின் போது வன்முறை வெடித்தது. தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சியினர் மறுத்தனர். அப்போது நடந்த போராட்டத்தில் மரியா கொரினா மச்சாடோ கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர் தலைமறைவாக உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டதற்காக நோபல் பரிசு குழுவுக்கு மரியா கொரினா மச்சாடோ நன்றி தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு நிறுவனத்துடன் அவர் நடத்திய உரை யாடலின்போது, ‘இந்த பரிசு வெனிசுலா மக்களுக்கு தகுதியான ஒன்று.

நான் பெரிய இயக்கத்தின் வெறும் ஒரு பகுதி மட்டும்தான். இந்த பரிசுக்காக பணிவுடன் இருக்கிறேன். நன்றியுடன் இருக்கிறேன். இந்த அங்கீகாரத்துக்கு மட்டுமின்றி, வெனிசுலா வில் இன்று நடக்கும் விஷயங்களில் ஒரு பகுதியாக இருப்பதற்கும் பெருமை அடைகிறேன்’ என தெரிவித்தார்.

முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் அவர், அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவின் துன்புறும் மக்களுக்கும், எங்கள் நோக்கத்தை உறுதியாக ஆதரிக்கும் ஜனாதிபதி டிரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.

அமைதிக்கான நோபல் பரிசை எதிர்பார்த்து ஏமாந்திருக்கும் டிரம்புக்கு, அந்த பரிசை அர்ப்பணிப்பதாக மரியா அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *