செய்திகள்

வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!

Makkal Kural Official

புதுடெல்லி, ஜூலை 26–

இன்று கார்கில் வெற்றி தினம். இதையொட்டி வீரர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து ஜனாதிபதி, பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்தியாவின் லடாக் யூனியனில் உள்ள கார்கில் மலைப் பகுதியை குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானை அடித்து விரட்டி நம் ராணுவ வீரர்கள் 1999 ஜூலை 26ல் வெற்றிக் கொடி நாட்டினர். போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு, தாய்நாட்டுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த நாள் நமது வீரர்களின் அசாதாரண வீரம், துணிச்சல் மற்றும் உறுதியைக் குறிக்கிறது. தேசத்துக்காக அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உயர்ந்த தியாகம் நாட்டு மக்களுக்கு என்றென்றும் ஊக்கமளிக்கும்.” என்று தெரிவித்தார்.

விஜய் திவாஸை முன்னிட்டு கார்கில் போரில் தைரியத்துடனும் வீரத்துடனும் போராடிய வீரர்களின் தியாகங்களை பிரதமர் மோடி இன்று நினைவு கூர்ந்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘கார்கில் போரில் நாட்டின் பெருமையைப் பாதுகாக்க தங்கள் உயிரை அர்ப்பணித்த இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் ஒப்பற்ற துணிச்சலையும் வீரத்தையும் இந்த நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. தாய்நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற அவர்களின் ஆர்வம் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். ஜெய் ஹிந்த்!’’ என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங்

டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில், கார்கில் போர் நினைவு தினத்தையொட்டி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். முன்னதாக, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கார்கில் தினத்தன்று நாட்டின் கவுரவத்தைப் பாதுகாப்பதில் துணிச்சல், மன உறுதியை வெளிப்படுத்திய நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கார்கில் போரில் நமது ஆயுதப் படைகள் வெளிப்படுத்திய உறுதி மற்றும் தியாகம் காலத்தால் அழியாத நினைவூட்டல், அவர்களின் சேவைக்கு இந்தியா என்றும் கடமைப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *