கட்டபொம்மன் –1
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்மையான எழுச்சி தமிழ்நாட்டில் நிகழ்ந்ததற்கு காரணமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். சுயமரியாதை சிந்தனையை உயிருக்கும் நிகராக உயர்த்திப்பிடித்தவர். சுதந்திரத்தின் தீப்பொறி. மானம் காக்க மரணத்தை தழுவியவர்.
அதிநவீன ஆயுதங்கள் ஏந்தி வந்த ஆங்கிலேயர்கள், கட்டபொம்மனின் போர்க்கலையில் திணறி நின்றனர். நேருக்கு நேர் கட்டபொம்மனை வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள், அவரது வீரத்தை தோற்கடிக்க துரோகத்தை நாடினர். துரோகத்தால் வீழ்ந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
வரலாறு துரோகத்தை தின்று செறித்து துப்பிவிட்டு போனது. இன்றும் வாழ்கிறார் கட்டபொம்மன் வராலாற்றில் வீரத்தின் விளைநிலமாக. பாஞ்சாலங்குறிச்சியின் வீரம் பார் முழுவதும் பட்டொளி வீசி நிற்கிறது.
பள்ளிப்பாடங்களில் படித்ததுண்டு, சினிமாவில் பார்த்ததுண்டு, கட்டபொம்மனின் வீரம், விவேகம் நிறைந்த வாழ்க்கை வரலாற்றை…
ஆனால், அவரது மறைவுக்கு பின், அவரது மனைவி, மகன் பற்றிய தகவல் தொல்பொருள் ஆராய்ச்சிக்குறிப்புகளில் அடங்கி கிடக்கிறது.
கட்டபொம்மன் சரித்திரம்
பேசும் ராஜமல்லம்மாள்
வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு குறித்து ‘மக்கள் குரல்’ நாளிதழின் சிறப்பு செய்திக்காக, கட்டபொம்மனின் ஆறாவது தலைமுறையை சார்ந்த ராஜ மல்லம்மாள் பேசும்போது தெரிவித்ததாவது:–
கட்டபொம்மனின் மகன் கம்பெனி செல்வம். கம்பெனி செல்வத்தின் மூத்த மகன் தளவாய்குமாரசாமி. இளைய மகன் சுப்ரமணிய துரை. இதில் தளவாய் குமாரசாமிக்கு நான்கு மகன்கள். அதில், சுப்ரமணிய துரைக்கு இரண்டு மகன்கள். அந்த இரண்டு மகன்களில் மூத்த மகன் ஜெகவீரபாண்டிய குமார கட்டபொம்ம துரை, இரண்டாவது மகன் ஜெகவீரபாண்டிய துரை.
அதில் ஜெகவீரபாண்டிய துரையின் மகன் சோமசுந்தர கட்டபொம்முதுரை. இவருக்கு நான்கு மகள்கள். அதில் இரண்டாவது மகள் தான் நான். ராஜ மல்லம்மாள் நான். தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை சரித்திரத்தை ‘மக்கள் குரல்’ வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை ஜெகவீரபாண்டிய கட்டபொம்மு. தாய் ஆறுமுகத்தம்மாள். வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை வீரமிக்கவர். திசைக்காவலராக இருந்தவர்.
தேசக்காவல், திசைக்காவல் என்று சொல்வார்கள். இதில் தேசக்காவல் என்பது அவர்களது பாளையத்துக்குள்ளேயே வரிவசூல் செய்வது. திசைக்காவல் என்பது மற்ற பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை பெற்று இருப்பது.
அதனால் அவரை திக்விசய கட்டபொம்மன் என்றும் அழைப்பதுண்டு. (திக்–திசை, விசய–வெற்றி)
ஜெகவீரபாண்டிய கட்டபொம்மு – ஆறுமுகத்தம்மாள் தம்பதிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் என ஐந்து பேர்.
இதில் மூத்த மகன் தான் வீரபாண்டிய கட்டபொம்மன், இரண்டாவது ஊமைத்துரை (தளவாய்குமாரசாமி), துரைசிங்கம். மகள்கள் ஈஸ்வரவடிவு, துரைக்கண்ணு.
1760ல் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது தந்தை இறப்புக்கு பின்னர், 1790ல், 47வது பட்டமாக பொறுப்பேற்றார் வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் பொறுப்பேற்கும் போது அவருக்கு வயது 30.
பாளையக்காரர்களின் அதிகாரத்தை
பறிக்க திட்டம் தீட்டிய ஆங்கிலேயர்கள்
1792ல் ஆற்காடு நவாப்புடன், ஆங்கியேலர்களின் கிழக்கிந்திய கம்பெனி உடன்படிக்கை செய்கிறது. உடன்படிக்கையின் படி திசைக்காவல் உள்ளிட்ட வரிகளை வசூலிக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் ஆங்கிலேயர்கள் இறங்கினர்.
ஆனால் அதனை அவ்வளவு எளிதாக அவர்களால் முடியவில்லை. ஊமைத்துரை இறந்த பின்னரே, ஆற்காடு நவாப்புடனான உடன்படிக்கையை ஆங்கிலேயர்களால் அமுல்படுத்த முடிந்தது.
அப்போது பாளையக்காரர் என்ற முறை இருந்தது. 72 பாளையங்கள் இருந்தன. அந்த 72ல் பாஞ்சாலங்குறிச்சி பாளையமும் ஒன்று. பாஞ்சாலங்குறிச்சி பாளையம் செழிப்பான பகுதியாக இருந்தது.
பாளையக்காரர் என்ற முறையை மாற்றிட ஆங்கிலேயேர்கள் திட்டமிட்டனர். பாளையக்காரர்களுக்கு அதிகாரம் அதிகம் உண்டு. கோட்டை வைத்துக்கொள்ளலாம். ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம். ஒரு போரை நிறுத்த வேண்டுமா, தொடர வேண்டுமா என்பது உள்ளிட்ட எந்த ஒரு விஷயத்திலும் யாரிடமும் அனுமதி வாங்க தேவையில்லை. அவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்.
இதனை தடுக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு, பாளையக்காரர்களை ஜமீன் முறைக்கு மாற்ற முயற்சி செய்ய தொடங்கினர். பாளையக்காரர்களுக்கு வருவாய் வரும் திசைக்காவல் உள்ளிட்ட வரிகளை முடக்க ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்தனர். பாளையக்காரர்களின் அதிகாரத்தை சுருக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். (முதல் தொடர்ச்சி )
![]()





