விழுப்புரம், நவ. 20
வீடூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் திறந்து வைத்தார். இதன் மூலம் 3 ஆயிரத்து 200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
திண்டிவனம் தாலுகா வீடூர் கிராமத்தில் வீடூர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 32 அடி ஆகும். தற்போது பெய்த பருவமழையின் காரணமாக அணையில் தற்போது 30.3. அடி தண்ணீர் உள்ளது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டில் 2,200 ஏக்கர் விளை நிலங்களும், புதுச்சேரி மாநிலத்தில் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி பாசன ஆயகட்டுதாரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீர் இருப்புக்கு ஏற்றவாறு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று விவசாயிகள் பயனடையும் வகையில் நவம்பர் 19-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு(2026) ஏப்ரல் 2-ந் தேதி வரை 135 நாட்களுக்கு பாசனத்திற்காக அணையில் இருந்து 328.350 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீரை திறந்து விட அரசு செயலாளர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் வீடூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் முன்னிலையில் வீடூர் அணையின் தலைமை மதகில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவிட்டார்.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், பயிற்சி கலெக்டர் கதிர் செல்வி, முன்னாள் எம்.எல்.ஏ. மாசிலாமணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருணகிரி, புதுச்சேரி மாநில செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி செயற் பொறியாளர் அய்யப்பன், ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், துணை தலைவர் புனிதா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி தமிழரசன், மாவட்ட தலைவர் டாக்டர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் செழியன், மணிமாறன், மாவட்ட பிரதிநிதி பிரகாஷ் மற்றும் வீடூர் அணை பாசன சங்க விவசாயிகள், பிரதிநிதிகள் வருவாய்த்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
![]()





