சென்னை, ஜன.20-–
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், மலேசியா நாட்டில் உள்ள 6 தமிழ்ப் பள்ளிகளுக்கு திருவள்ளுவர் சிலைகளை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
மலேசிய நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 6 தமிழ்ப்பள்ளிகளில், திருவள்ளுவர் சிலைகளை நிறுவுவதற்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் 6 திருவள்ளுவர் சிலைகளை, மலேசியா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பா.கு.சண்முகத்திடம் வழங்கினார்.
இதுகுறித்து வி.ஜி.சந்தோசம் கூறும்போது, ‘வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் உலகமெங்கும் இதுவரை 191 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ளோம். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை உலகமெல்லாம் நிறுவுவதற்கும், திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்கவும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் என்றும் பாடுபடும்’ என்றார்.
இந்த விழாவில், மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.ஏ.சத்யா, மலேசிய நாட்டின் முருகன், பிரான்ஸ் நாட்டின் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் விசு செல்வராஜ், மலேசிய நாட்டின் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
![]()





