சென்னை, ஆக. 17–
விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் 89ம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, விஜிபி ஹெரிடேஜ் ரிசார்ட்டில் வள்ளுவர் கார்டன் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நூல் வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற்றது. மேலும் பிறந்தநாள் விழாவில் முக்கிய பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டு வி.ஜி. சந்தோசத்தை நேரில் வாழ்த்தினர்.
தொழில், தமிழ், சமூக சேவை எனப் பன்முகத் தளங்களில் முத்திரை பதித்த விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசத்தின் 89வது பிறந்தநாள் விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கொண்டாடப்பட்டது.
இதன் தொடக்கமாக வளாகத்தில் ‘வள்ளுவர் கார்டனை’ விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து விஜிபியின் 186வது திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
விழாவின் மகுடமாக, ‘வி.ஜி. சந்தோசம் அண்ணாச்சியின் நிலைத்த புகழுக்குக் காரணம் தொழில் பற்றா? மொழிப் பற்றா?’ என்னும் தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் சிறப்புப் பட்டிமன்றம் பேராசிரியர் உலகநாயகி பழனி தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் முனைவர் பெரியண்ணன் எழுதிய ‘உலக வரலாற்றில் வி.ஜி சந்தோசம்’ எனும் நூலினை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட, முதல் பிரதியினை எஸ்.ஆர்.எம்.வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் பெற்றுக்கொண்டார்.
விழாவின் சமூகப் பரிமாணத்தை வெளிப்படுத்தும் விதமாக தொண்டு நிறுவனங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் நோக்கில் 5 தையல் யந்திரங்கள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வி.ஜி. சந்தோசம் ஏற்புரை வழங்கி, விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்தப் பிறந்தநாள் விழாவில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஔவை அருள், மல்லை தமிழ் சங்கத் தலைவர் மல்லை சத்யா, மக்கள் குரல் ஆசிரியர் முத்துக்குமார், மாதா கல்லூரி நிறுவனர் பீட்டர், தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ் சோழ நாச்சியார், தொழிலதிபர்கள் பழனி ஜி.பெரியசாமி, ரோமா குழும இயக்குநர் ராஜன், அந்தோணி, சுகஜீவ சபையின் நிறுவனர் வி.ஜி.செல்வராஜ், விஜிபி ரவிதாஸ், விஜிபி ராஜாதாஸ், விஜிபி பிரசாத்தாஸ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டு வி.ஜி. சந்தோசத்தை வாழ்த்தினர்.
இந்த விழாவில் அறிவுப்பூர்வமான விவாதங்கள், அர்த்தமுள்ள சமூகப் பணிகள் என தமிழ்ச் சமூகத்தின் ஒரு பண்பாட்டு நிகழ்வாகவே திகழ்ந்தது.
![]()





