செய்திகள்

‘‘விவசாயிகளின் விரோதி அமைச்சர் தங்கம் தென்னரசு’’: எடப்பாடி சரமாரி குற்றச்சாட்டு

Makkal Kural Official

திருச்சுழி, செப்.2–

காவிரி – குண்டாறு திட்டம், அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால், இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்க மறுத்து விட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் நேற்று திருச்சுழி தொகுதியில் காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் அண்ணாதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அவர் பேசியதாவது:–

இரவு 10 மணி ஆனபிறகும் அண்ணா தி.மு.க. வை வெற்றி அடையச் செய்வோம் என்று காத்திருக்கும் திருச்சுழி மக்களின் எழுச்சியே அடுத்து அமைய இருக்கும் அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு சாட்சி. எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற காரியாப்பட்டி பகுதி மக்களிடம் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருச்சுழி விவசாயிகள் நிறைந்த தொகுதி. நானும் விவசாயி என்பதால்தான் விவசாயத்துக்கு நீர் முக்கியம் என்பதை நான் அறிந்து, இப்பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று காவிரி – குண்டாறு திட்டத்தை கொண்டு வந்தேன்.

அந்த திட்டம் நிறைவடைந்தால் இப்பகுதி செழிப்படையும். ஆனால் அண்ணா தி.மு.க. ஆட்சியின் திட்டம் என்கிற ஒரே காரணத்தினால் நிதி ஒதுக்காமல் முடக்கி வைத்துள்ளனர். 14000 கோடி திட்டம் போட்டு 700 கோடி நிதி ஒதுக்கி புதுக்கோட்டையில் பணியை துவக்கி வைத்தேன். இந்த தொகுதியின் எம்.எல்.ஏ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உங்களுக்கு விரோதமாக செயல்படுகிறார், நிதி ஒதுக்க மறுக்கிறார். மக்களுக்கு கிடைக்கவேண்டிய பலனை தடுத்து நிறுத்துகிறார்.

துரோகம் செய்த

தங்கம் தென்னரசு

நிதி அமைச்சராக இருந்துகொண்டு மக்களுக்கு இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என்றால் அவர் எம்.எல்.ஏ.வாக இருந்து என்ன பயன்? உங்களுக்கு ஓட்டு போட்டு என்ன பிரயோஜனம்? அண்ணா தி.மு.க. திட்டதை முடக்க நிதி அமைச்சர் துணை போகிறார். இன்னும் 7 மாதம் இருக்கிறது விவசாயிகள் நிலை கருதி இத்திட்டத்தை மீண்டும் துவக்குங்கள், மக்கள் கொஞ்சமாவது மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வளவு பெரிய திட்டத்துக்கு மத்திய அரசை நான் அணுகவில்லை, சொந்த நிதியைக் கொண்டே துவக்கினோம். முழுக்க மாநில அரசு நிதி. இதில் எவ்வளவு பிரச்சினை, நிதி பிரச்சினை இருந்தாலும் விவசாயிகள் பிரச்சினை என்பதால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் திட்டத்தைத் துவக்கினோம்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் மேட்டூரில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீர் வீணாக கடலில் கலக்காமல், அந்த கால்வாய் வழியாக குண்டாறு வந்திருக்கும், கண்மாய்கள் நிரம்பியிருக்கும், நீர் கிடைத்திருக்கும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கும். ஆனால் தி.மு.க. அரசு வேண்டுமென்றே கிடப்பில் போட்டுள்ளது. மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இந்த கனவுத்திட்டம் செயல்படுத்தப்படும். நானே வந்து துவக்கிவைப்பேன். விவசாயிகள் மகிழ்வார்கள், விவசாயத் தொழிலாளர்கள் வேலை பெறுவார்கள். இத்திட்டத்தை முடக்கிய திமுகவுக்கு தேர்தலில் தகுந்த பதிலடியை நீங்கள் கொடுக்க வேண்டும். மக்களுக்காகத்தான் எம்.எல்.ஏ.வும் அரசும் இருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. வீட்டு மக்களுக்காக இருக்கிறது, அண்ணா தி.மு.க. நாட்டு மக்களுக்காக இருக்கும் கட்சி.

கடன் வாங்குவதில் சாதனை

தி.மு.க.வின் ஐந்தாண்டு முடியும் தருவாயில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. கடன் வாங்கியதில்தான் சாதனை படைத்தது தி.மு.க. அரசு. 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் தான். ஆனால் அதைவிட தி.மு.க.வின் இந்த ஐந்தாண்டு கால கடன் சுமை அதிகம். நம் எல்லோரையும் கடனாளியாக்கியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. இன்னும் ஒரு ஆண்டு ஆட்சி இருக்கிறது. அதிலும் 1 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவாங்க. இந்த கடனை எப்படி அடைக்க முடியும்? வரி போட்டுத்தான் இந்த கடனை அடைப்பார்கள். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா..? இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. கூடுதலாக 1 லட்சத்து 36 ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளது. ஆனாலும், புதிய திட்டம் எதுவும் கொண்டுவரவில்லை

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள்.

ஆற்றில் மிதக்கும் மனுக்கள்

நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி சேலத்தில் இளைஞர் அணி மாநாட்டில் கொடுக்கப்பட்டது. அவை எல்லாம் காற்றில் பறந்து சென்றது. அது போன்றுதான் உங்களுடன் ஸ்டாலின் மனுக்களும் தண்ணீரில் மிதக்கிறது. எந்தளவுக்கு மக்களை மதிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள், இவர்களா மக்களை காப்பாற்றுவார்கள்? டீ கடைகளில் வடை கட்டுவதற்கு உங்களுடன் ஸ்டாலின் மனுவை பயன்படுத்துகின்றனர்.

இந்த அரசு அமைந்ததில் இருந்து கருணாநிதி குடும்பம் மட்டும்தான் பிழைக்கிறது. ஒரு குடும்பம் பிழைக்க நாம் அடிமையாக இருக்க வேண்டுமா? தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தைத் தவிர யாரும் கட்சியிலும் உயர்ந்த பதவிக்கு வரமுடியாது, ஆட்சியிலும் வர முடியாது. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என்று மூன்று பேரும் கட்சியில் முக்கியமான பதவிகளை எல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆட்சியிலும் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் வர முடியும். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, அடுத்து இன்பநிதி வரைக்கும் வந்துவிட்டனர். ஆனால் அண்ணா தி.மு.க.வில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட பதவிக்கு வரலாம்.

திமுகவில் கருணாநிதி குடும்பம் மாதிரியே, திமுக அமைச்சர்களுடைய பிள்ளைகள் தான் எம்.எல்.ஏவாக, அமைச்சராக முடியும். இப்படிப்பட்ட வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்.

நரிக்குளம் ஒன்றியத்தில் இருக்கும் மருத்துவக் கழிவு ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்தடி நீரில் கலந்து பாதிப்பை உருவாக்குகிறது. இதனை அந்த நிறுவனம் உடனடியாக சுத்திகரிக்க வேண்டும். அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சுழி தொகுதிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கினோம். குண்டாற்றில் 10.5 கோடி ரூபாயில் தடுப்பணை கட்டினோம். குடிமராமத்துத் திட்டம் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவந்தோம். விவசாயிகளுக்கு நீர் முக்கியம் என்பதால் நீர்நிலைகளை தூர் வாரி தண்ணீரை பாதுகாத்துக் கொடுத்தோம். விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் கிடைத்தது. நீங்கள் இன்னும் பல கோரிக்கைகள் கொடுத்திருக்கிறீர்கள். அவை அத்தனையும் அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றிக் கொடுக்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *