விழுப்புரம், நவ. 18–
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு, தூத்துக்குடி இரயில் நிலையத்திலிருந்து சரக்கு இரயில் மூலம் வந்தடைந்த ஸ்பிக் SPIC நிறுவன உர மூட்டைகளை மாவட்ட கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு ஸ்பிக் உர நிறுவனத்தின் 1299 மெ.டன் உரமூட்டைகள் வந்தடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடிக்கான நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர் மேலும் உளுந்து, நிலக்கடலை, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய தேதியில் சம்பா பயிர் சாகுபடிக்கு தேவையான யுரியா 2345 மெ.டன், டிஏபி 1467 மெ.டன், பொட்டாஷ் 1180 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 7396 மெ.டன், சுப்பர் 1783 மெ.டன் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்திற்கு தேவையான உர விநியோகத் திட்ட இலக்கீட்டின்படி உர நிறுவனங்களிடமிருந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. அந்த வகையில் ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து 663 மெ.டன் யுரியா, டிஏபி 253 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 319 மெ.டன் மற்றும் சுப்பர் 64 மெ.டன் என மொத்தம் 1299 மெடன் உர மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்துள்ளன. எனவே சம்பா பருவத்திற்கு போதுமான அளவிற்கு யுரியா மற்றும் இதர உரங்களான டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளெக்ஸ் மற்றும் சுப்பர் பாஸ்பேட் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு எவ்வித தடையுமின்றி விநியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில், வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், துணை ஆட்சியர் (பயிற்சி) கதிர் செல்வி, உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுபாடு) விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
![]()





