செய்திகள்

விழுப்புரம் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள்: தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு

Makkal Kural Official

விழுப்புரம், டிச.25-

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார்.

தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ருவண்ணாமலையில் ஆய்வுப்பணியை முடித்து விட்டு மாலையில் தனி ஆய்வு ரெயில் மூலம் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார். அவர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா? என்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளின் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதுடன் ரெயில் நிலையத்தை சுகாதாரமாக வைத்திருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார். அப்போது மேம்பாட்டு பணிகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன், பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் நகரும் படிக்கட்டுகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட அவர், அப்பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகத்தை விரைவில் பயன்பாட்டுக்காக திறக்கும்படி உத்தரவிட்டார்.

அப்போது அவரிடம், விழுப்புரத்தில் செயல்படாமல் பூட்டிக்கிடக்கும் ரெயில்வே பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறும், அதுபோல் ரெயில்வே மருத்துவமனையை மேம்படுத்தி மீண்டும் சிறப்பான முறையில் செயல்பட வழிவகை செய்யுமாறும் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதை கேட்டறிந்த தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.

மேலும் ரெயில் நிலையம் அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரம்- புதுச்சேரி சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் முறையிட்டு அதற்கான மனுவை அளித்தார்.

மனுவைப்பெற்ற பொதுமேலாளர், இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். அதனைத்தொடர்ந்து அவர், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் சென்னை எழும்பூருக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த ஆய்வின்போது திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *