விழுப்புரம், ஜூலை 10–
விழுப்புரத்தில் 17 தூய்மை பணியாளர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் நிதியுதவி மற்றும் 105 தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், தூய்மைப்பணியாளர்களின் பணி அர்ப்பணிப்பு மிக்க பணியாக உள்ளது. குறிப்பாக, கொரோனா போன்ற போிடர் காலத்தில், தங்கள் உயிரை துச்சமென எண்ணி தூய்மைப்பணியினை சிறப்பாக மேற்கொண்டு இலட்சக்கணக்கான மக்களின் இன்னுயிர்களை காத்துள்ளார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் அரசின் சார்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் தங்களின் மேம்பாட்டிற்கான செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கலெக்டர் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் தூய்மைப்பணியாளர்களின் பாதுகாப்பிற்கான காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு நகராட்சிகளில் குறிப்பிட்ட தொகையினை வைப்புத்தொகையாக செலுத்தியுள்ளது. இதனை கொண்டு தூய்மைப்பணியாளர்கள் கூட்டாக ஒன்று சோ்ந்து தொழில் புரிந்து தொழில்முனைவோராக உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படுகிறது. எனவே, அனைத்து தூய்மைப்பணியாளர்களும் அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், துணைத் தலைவர், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் செ.கனிமொழி பத்மநாபன், தாட்கோ, மாவட்ட மேலாளர் உ.ரமேஷ்குமார், மாநில உறுப்பினர்கள், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியம் டாக்டர் தே.கண்ணன், ராஜன், சீனுவாசன், ஹரிஷ்குமரர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





