விழுப்புரம், டிச. 22:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் பகுதியில் மண் பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி (வியாழக்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று புதுப்பானையில் பொங்கலிடுவதை இன்றளவும் தமிழர்கள் மரபாக கொண்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் அருகே சாலைஅகரம், ராகவன்பேட்டை, அய்யங்கோவில்பட்டு, அய்யூர்அகரம் உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் பல ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயார் செய்யப்படும் மண் பானைகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல வெளிமாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த அதிகனமழையினால் மண் பானைகள் தயாரிப்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு அதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே மண் பானைகள் தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில் தற்போது மண் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறிய அளவிலான பானைகள் முதல் பெரிய அளவிலான பானைகளை தயாரித்து வருகின்றனர்.
![]()





