செய்திகள்

விழித்திரை மாற்று அறுவை சிகிச்சைக்கு புதிய தொழில்நுட்பம்: டாக்டர் அமர் அகர்வாலின் கண்டுபிடிப்பு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 26–

டாக்டர் அகர்வால்ஸ்கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவரும், உலக அளவில் புகழ்பெற்ற கண் மருத்துவருமான பேராசிரியர் அமர் அகர்வால், ‘‘பின் ஹோல் புப்பிலோபிளாஸ்டி’’ (பிபிபி) என்ற புதிய அறுவை சிகிச்சை முறையை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளார். கண் கருவிழிப் படல மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக அமைந்திருக்கும் இச்சிகிச்சை முறை எளிதான ஒன்றாகும்.

உலகளாவிய அளவில் கருவிழி தானம் அளிப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இன்றும் லட்சக்கணக்கானோர் பார்வை பெறும் வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். இச்சூழலில் ‘பிபிபி’ என்னும் இந்த சிகிச்சை ஒரு சிறப்பான தீர்வை வழங்குகிறது. பல நோயாளிகளின் விஷயத்தில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை என்பது இடர் மிகுந்ததாகவும், சாத்தியமற்றதாகவும் இருந்திருக்கிறது. இந்நிலையில், இது ஒரு பாதுகாப்பான, நல்ல பலன் தரும் மாற்று வழியாகவும் அமைந்திருக்கிறது.

கூம்புக் கருவிழி, கண்ணில் காயம், உயர் நிலை பார்வை பிறழ்வுகள் முதலிய கருவிழிப்படல பிரச்சனைகளுடன் இருப்போருக்கு இச்சிகிச்சை முறை, அவர்களின் பார்வைத்திறனை மேம்படுத்த பெருமளவு உதவுகிறது. மேலும் கண்ணாடி அணிவது, கான்டாக்ட் லென்ஸ் அணிவது ஆகியவற்றிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.

பிபிபி சிகிச்சை, மிகச்சிறிய அளவே உடலை ஊடுருவும் சிகிச்சை முறையாகும். இதற்காகவே நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட- மையத்தில் திறந்துகொள்ளும் வகையில் (ஊசித்துளை அளவில்) விழித்திரை அமைந்துள்ள இடத்தில் இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம், கண்ணுக்குள் பாயும் ஒளி, வடிகட்டப்படுகிறது. இந்த ஊசித்துளை வடிவ அமைப்பு பயன்படுத்தப்படுவதால் ஒழுங்கற்ற ஒளி, ஊடுருவது தடுக்கப்படுகிறது.

மேலும், நேரான மற்றும் தெளிவான ஒளிக்கற்றைகள் மட்டுமே விழித்திரைக்குத் துல்லியமாக அனுமதிக்கப்படும். இதனால், கருவிழிப்படலப் பகுதி ஒழுங்கற்ற முறையில் அமைந்த நோயாளிகளுக்கு பார்வை தெளிவு கிடைக்கும்.

200 கோடி பேருக்கு

பார்வைத் திறன் இல்லை…

இதுகுறித்துப் பேசிய டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைக் குழுமத்தின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் கூறுகையில், “உலகமெங்கும் 2 பில்லியன் (200 கோடி) மக்கள் பார்வைத் திறன் இல்லாதவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலானோருக்கு கருவிழி தானம் கொடுப்போரே கிடைப்பதில்லை. ஆக, கருவிழி செயலிழப்பு அதிகரித்து வரும் நிலையில் பின்ஹோல் புப்பிலோபிளாஸ்டி ஒரு நடைமுறை சாத்தியமுள்ள, மாற்றம் தரும் உடனடித் தீர்வைத் தருகிறது என்றார்.

உலகளாவிய இந்த மருத்துவ சவாலுக்கு பிபிபி எனும் பொருள் பொதிந்த தீர்வை அளிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளைப் பொறுத்தவரை குறைந்த கட்டண சிகிச்சை என்பது அவசியமானதாகும். எனவே, தற்போதைய இந்தத் தொழில்நுட்பம் உண்மையிலேயே ஒரு மாற்றத்தைத் தர வல்லதாக இருக்கிறது என்றும் கூறினார்.

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நாங்கள் 250 கிளைகளுடன் செயல்பட்டுவருகிறோம். இவை அனைத்திலும் இச்சிகிச்சை தொடங்கப்பட்டுவிட்டது. இதனை மென்மேலும் விரிவுபடுத்திவருகிறோம். உலகமெங்குமுள்ள கண் மருத்துவப் பணியாளர்களுக்கு இப்புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சியளிக்க உறுதி பூண்டிருக்கிறோம்” என்றார் அவர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *