கடலூர், ஜன.22–
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியில் ரூ.20.65 கோடி மதிப்பீட்டில் தினசரி காய்கறி கடை, முத்துமாரியம்மன் கோயில் குளம் புனரமைப்பு, அறிவுசார் மையம், வணிக வளாக கடை, அரசு மருத்துவமனை கூடுதல் கட்டுமானம், மணிமுத்தாற்றில் படித்துறை பணி உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவது குறித்து மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போதுகலெக்டர்சிபி ஆதித்யா செந்தில் குமார் கூறியதாவது:–
விருத்தாசலம் தினசரி காய்கறி கடை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.52 ஏக்கர் பரப்பளவில் 1,09,773 சதுர அடியில் 190 கடைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிவறை வசதிகள், 30 எல்.இ.டி விளக்குகள், பேவர் பிளாக் தரை வசதி, வாகன நிறுத்தம், பொருட்களை பாதுகாப்பாக வைக்கும் வகையில் ஒவ்வொரு கடைக்கும் ஸ்வட்டர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் ரூ.5.41 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
முத்துமாரியம்மன் கோயில் குளம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 14.57 ஏக்கர் பரப்பளவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 1295 மீ நீளத்திற்கு நடைபாதை, 1295 மீ நீளத்திற்கு சுற்றுவேலி, 45 விளக்குகள், 30 மேசை வசதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வந்துசெல்லும் வகையில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் சுற்றுப் பகுதிகளில் அதிகரிப்பதுடன், குடிநீர் ஆதாரத்திற்கும் பயனுள்ள வகையில் அமையும்.
விருத்தாசலம் மணிமுத்தாற்றில் கனிம வள நிதியின் கீழ் ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் வந்துசெல்லும் வகையில் படித்துறை கட்டும் பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
விருத்தாசலம் நகரத்தில் வணிக வளாக கடை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் 632 சதுர அடி பரப்பளவில் க10 கடைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிவறை வசதிகள் மற்றும் காற்றோட்டமான சூழ்நிலையில் பொதுமக்கள் வந்துசென்று பயனடையும் வகையிலும், நகராட்சி நிருவாகத்திற்கு நிரந்தர வருவாயினை ஈட்டித் தரும் வகையிலும் கட்டப்பட்டு வருகிறது.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் 5 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. அணைத்து தளத்திற்கும் லிப்ட் வசதி, செவிலியர் நிறுத்தம், கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
ஆய்வின் போது நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
![]()





