ஹனோய், ஜூலை 20–
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில், 8 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிய நாடுகளில் புகழ்பெற்ற சுற்றுலா தேசங்களுள் ஒன்றாக விளங்குவது வியட்நாம். இதன் தலைநகர் ஹனோயில் இருந்து 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது திடீரென சூறைக்காற்று பலமாக வீசியதாக கூறப்படுகிறது . அதில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதனால், படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
34 பேர் பலி
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், கடலில் தத்தளித்த 11 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில், 8 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர். மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()





