செய்திகள்

விமான கட்டணத்தை அதிகபட்சம் ரூ.18 ஆயிரம் வரை வசூலிக்க மத்திய அரசு உத்தரவு

Makkal Kural Official

இண்டிகோ விமானங்கள் ரத்து எதிரொலி

புதுடெல்லி, டிச.7-

இண்டிகோ விமானங்கள் ரத்து காரணமாக கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனையடுத்து கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதிகபட்சம் ரூ.18 ஆயிரம் வரை வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை.

இதனால் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 5 நாட்களாக இது தொடர்ந்து வருகிறது. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு விமானங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு பயணத் தடை ஏற்பட்டு அவதிப்பட்டனர். இது தொடர்பாக விமான நிலையத்தில் இண்டிகோ பணியாளர்களுடன் பயணிகள் சண்டையிடும் சம்பவங்கள் நடக்கிறது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. இந்தநிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. விமானங்கள் ரத்து படிப்படியாக சரியாகும் என தெரிகிறது. அதுவரை பணியாளர் பணிநேர கட்டுப்பாடு விலக்கி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் அட்டவணைகள் இயல்பு நிலைக்கு திரும்பத்தொடங்கி, அடுத்த 3 நாட்களுக்குள் முழுமையாக நிலைபெறும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

10 மடங்கு கட்டணம் உயர்வு

இதற்கிடையே இண்டிகோவின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பிற விமான நிறுவனங்கள் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி விட்டன. இதனால் இண்டிகோவும் உயர்த்த வேண்டியதாகி விட்டது. சில விமானங்களுக்கு 10 மடங்கு கட்டணம்கூட உயர்ந்தது. இதனால் பயணிகளுக்கு இடையே மேலும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அரசின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பயணிகளின் நலனுக்காக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது. அதில் முக்கியமான உத்தரவுகள் வருமாறு:-

ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணத்தை பயணிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்குள் இண்டிகோ நிறுவனம் திரும்ப செலுத்த வேண்டும்.

ரத்து மற்றும் தாமதங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளின் “செக்-இன்” உடைமைகள் அனைத்தும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் பயணிகளின் குடியிருப்பு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட முகவரிக்கு டெலிவரி செய்யப்படுவதை இண்டிகோ உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு மற்றும் டெலிவரி காலக்கெடு குறித்து பயணிகளுடன் தெளிவான தகவல்தொடர்பிலும் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் இழப்பீடும் வழங்க வேண்டும்.

ரத்து அல்லது தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு எந்த மறு அட்டவணை கட்டணமும் வசூலிக்கக்கூடாது.

நாடு தழுவிய இந்த நெருக்கடியால் விமான கட்டணங்கள் அதிகரிப்பதை தடுக்கவும் அரசாங்கம் கட்டண வரம்பு விதித்துள்ளது. இவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை விமானக் கட்டண வரம்புகள் அமலிலேயே இருக்கும். ஏதேனும் மீறல்கள் ஏற்பட்டால் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும்.

விமான நிறுவனங்கள் பொறுப்பு

விமானம் ரத்து செய்யப்பட்டால், விமான நிறுவனங்கள் தானாகவே முழு பணத்தையும் திரும்ப வழங்க வேண்டும். இதற்கு பயணிகளின் கோரிக்கைகள் தேவையில்லை.

நீண்ட தாமதங்களில் சிக்கித்தவிக்கும் பயணிகளுக்கு தங்குமிடம், உணவு மற்றும் அத்தியாவசிய சேவைகளை விமான நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

பாதிக்கப்படக்கூடிய பயணிகளுக்கு ஓய்வறை அணுகல், விரைவான செயலாக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய உதவி உள்ளிட்ட சிறப்பு ஆதரவு வழங்கப்பட வேண்டும்.

மேலும், இந்த இடையூறு காலத்தில் பயணிகளின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அனைத்து செயல்பாட்டு பங்குதாரர்களுடனும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பில் உள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி பயணிகள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் அவசர பயணம் தேவைப்படும் அனைவருக்கும் முறையான வசதிகளை உறுதி செய்வதற்காக மேற்பார்வை வழிமுறைகள் வலுப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த மீட்பு செயல்முறையை அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், முழுமையான செயல்பாட்டு இயல்புநிலையை விரைவில் மீட்டெடுப்பதில் உறுதியாக உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில் விமான கட்டண உயர்வு தொடர்பான புகார்களை பெற்ற சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், கொரோனா காலத்தில் மேற்கொண்டதைப் போல கட்டண நிர்ணயத்தில் மீண்டும் தலையிட்டு அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது.

இதன்படி 500 கி.மீ. தூரம் வரையிலான பயணத்துக்கு அதிகபட்சமாக ரூ.7500-ம், 500 முதல் 1000 கி.மீ. வரை அதிகபட்சம் ரூ.12 ஆயிரமும், 1000 முதல் 1500 கி.மீ. வரை அதிகபட்சம் ரூ.15 ஆயிரமும், 1500 கி.மீ.-க்கு மேல் அதிகபட்சமாக ரூ.18 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *