சென்னை, ஜூலை.8-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார்.
ஆக்சியம்-–4 பயணத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறையின் செயலாளருமான வி.நாராயணன் மற்றும் விஞ்ஞானிகளுடன் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடினர்.
அப்போது தலைவர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்தப்படும் பல்வேறு அறிவியல் பரிசோதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சுபான்ஷுவிடம் விசாரித்தார்.
சுபான்ஷு பூமிக்குத் திரும்பிய பிறகு அனைத்து சோதனைகள் மற்றும் செயல்பாடுகளையும் கவனமாக ஆவணப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இஸ்ரோ தலைவர் நாராயணன் வலியுறுத்தினார். இது இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானின் வளர்ச்சிக்கு முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கும் என்றார்.
இந்த கலந்துரையாடலில், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனரும், மனித விண்வெளித் திட்ட மேலாண்மை கவுன்சிலின் தலைவருமான உன்னிகிருஷ்ணன் நாயர், திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தின் இயக்குனர் எம்.மோகன் உள்ளிட்ட இஸ்ரோவின் பல மூத்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த அழைப்பின்போது, சுபான்ஷு சுக்லாவுடன் தொடர்பு கொள்ளவும், பணியின் பல்வேறு அம்சங்கள் மற்றும் நடத்தப்படும் சோதனைகள் குறித்து விவாதிக்கவும் இந்த அதிகாரிகள் வாய்ப்பு பெற்றனர்.
![]()





