புதுடெல்லி, ஆக.22-
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியாதான் உலகிலே யே அழகாக தெரிகிறது என சுபான்ஷு சுக்லா கூறினார்.
‘ஆக்சியம்-–4’ பயணம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, கடந்த 17-ந்தேதி டெல்லி வந்தார். 18-ந்தேதி பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு, சொந்த ஊரான லக்னோ சென்ற அவர், டெல்லியில் நடைபெறும் விண்வெளி தொடர்பான மாநாட்டில் பங்கேற்க நேற்று மீண்டும் டெல்லி வந்தார்.
டெல்லியில் இஸ்ரோ தலைவர் நாராயணன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திரசிங், ககன்யான் பணியில் சுபான்ஷு சுக்லாவுடன் இணையும் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோர் நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது சுபான்ஷு சுக்லா கூறியதாவது:-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் எனது முதல் அனுபவம் விலை மதிப்பற்றது. இது முழு நாட்டுக்குமான பணி. இந்த பணி குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடி மகனுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். விண்வெளிக்கு செல்வ தற்காக எனக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ரஷியா, இந்தியா, அமெரிக்கா என 3 இடங்களில் பயிற்சி பெற்றோம். ஒரே விஷயத்துக்கான பயிற்சி தான் என்றாலும் வெவ்வேறு நெறிமுறைகளில் இலக்கை எவ்வாறு அடைவது? என்ற இந்த பயிற்சி மிகவும் சுவாரசியமாக இருந்தது.
ஆக்சியம்-–4 பயணத்தில் நாங்கள் 2 வாரங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கினோம். நான் விமானியாக இருந்தேன்.
கேப்டனாக இருந்து கட்டளையும் இட்டேன். விண்வெளியில் இருந்தது ஒரு தனித்துவமான அனுபவம். அங்கிருந்து இந்தியாவின் அழகைப் பார்க்க அற்புதமாக இருந்தது. இந்தியாதான் உலகிலேயே அழகாக தெரிந்தது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பெற்ற நுட்பமான அறிவுப் பூர்வங்கள் இந்தியாவின் ககன்யான் பயணத்துக்கு விலைமதிப்பற்ற அனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன்.
எதிர்காலத்தில், நம் சொந்த தயாரிப்பில் இருந்து, நமது சொந்த மண்ணில் இருந்து ஒருவர் விண்வெளிக்கு பயணிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், ‘சாரே ஜஹா சே அச்சா’ (எல்லா இடங்களை யும் விட இந்தியாவே சிறந்தது என அர்த்தம்) என்றும் பேட்டியின்போது அவர் குறிப்பிட்டார். இது 1984-ம் ஆண்டு விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் ராகேஷ் சர்மா பயன்படுத்திய வார்த்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கை சுபான்ஷு சந்தித்தார்.
![]()





