ஸ்ரீஹரிகோட்டா, நவ.3-
4,400 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளுடன் ‘பாகுபலி’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவும்.
தகவல்தொடர்பு துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதற்காக ரூ.1,600 கோடி மதிப்பில் அதிக எடை கொண்ட சி.எம்.எஸ்-03 என்ற முதல் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், விண்ணில் செலுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட ‘பாகுபலி’ ராக்கெட் என்று கூறப்படும் ‘எல்.வி.எம்.3-எம்5’ ராக்கெட்டில் பொருத்தப்பட்டது.
இதனையடுத்து ராக்கெட் ஏவுவதற்காக ‘கவுண்ட்டவுன்’ நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. 24 மணி நேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்3-எம்5 ராக்கெட் நேற்று மாலை 5.26 மணிக்கு தீப்பிழம்பை கக்கியப்படி வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்தது.
ராக்கெட் புறப்பட்ட 16 நிமிடம் 29 வினாடிகளில் சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோள் பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் உயரத்தில் திட்டமிட்ட புவி ஒத்திசைவற்ற பரிமாற்ற சுற்றுப்பாதையில் (ஜ.டி.ஓ) வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. உடனடியாக, கட்டுப்பாட்டு அறையில் கூடியிருந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது இஸ்ரோ தலைவர் நாராயணன், விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ‘எல்.வி.எம்.3 என்பது இஸ்ரோவின் செயல்பாட்டு கனரகப்பொருட்களை தூக்கி செல்லும் ராக்கெட்டாகும். தொடர்ந்து 7 பணிகளை இந்த ரக ராக்கெட்டுகள் வெற்றிகரமாக முடித்துள்ளன. தற்போது புவி ஒத்திசைவற்ற பரிமாற்ற சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக ஏவப்பட்ட 4,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோள், இந்திய மண்ணில் இருந்து ஏவப்பட்ட மிக அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இஸ்ரோவின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (எல்.வி.எம்-எம்5) ராக்கெட் புவி ஒத்திசைவற்ற பரிமாற்ற சுற்றுப்பாதை மற்றும் அதற்கு அப்பால் அதிக சுமைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதில் பொருத்தப்பட்டிருந்த சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோள் இந்தியாவின் பரந்த கடல் பகுதியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படை மற்றும் இந்திய நிலப்பரப்பிலும் வலுவான, உயர்-செயல்திறன் கொண்ட டிஜிட்டல் தகவல் தொடர்பு சேவைகளை துல்லியமாக வழங்கும். அத்துடன், டி.வி., மருத்துவம், கல்வி மற்றும் அவசர சேவைகளையும் மேம்படுத்துவதுடன், தேசிய தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், நம்பகமான இணைப்பு மற்றும் சேவையை வழங்கும். இது மல்டி- பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும். இது அவசர தொடர்பு உள்கட்டமைப்பையும், டிஜிட்டல் இந்தியா மற்றும் நீல பொருளாதாரத் துறைகளையும் மேம்படுத்துகிறது.
![]()





