செய்திகள்

விண்ணில் பாய்ந்தது ‘இஸ்ரோ’வின் ‘பாகுபலி எல்விஎம்–3 எம்6 ராக்கெட்’

Makkal Kural Official

ஸ்ரீஹரிகோட்டா, டிச. 24–

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) பாகுபலி ராக்கெட் இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

திட்டமிட்டபடி துல்லியமாக சுற்று வட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது என ‘இஸ்ரோ’ தெரிவித்தது.

‘இஸ்ரோ’ வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட்–6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளை, இஸ்ரோவின் எல்விஎம்–3 எம்6 ராக்கெட் மூலம் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.

தகவல் தொடர்புக்கான புளூபேர்ட் செயற்கைக்கோள் சுமார் 6,100 கிலோ எடை கொண்டது. இது 223 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அமைப்பை கொண்டது. விண்வெளியிலிருந்து நேரடியாக சாதாரண ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதை இந்த செயற்கைக்கோள் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், விடியோ அழைப்புகள், குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும்.

ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்காக 24 மணி நேர கவுண்டவுன் முடிவடைந்த நிலையில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.54 மணிக்கு, எல்.வி.எம்.–3 எம் 6 ராக்கெட் வாயிலாக ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

தரையில் இருந்து புறப்பட்டு 15 நிமிஷம் 52 வது வினாடியில், 520 கி.மீ உயரத்தில் செயற்கைக்கோள் திட்டமிட்ட தாழ்வட்டப் பாதையில் துல்லியமாக நிலை நிறுத்தப்பட்டது.

பிரதமர் பாராட்டு

‘‘புளூபேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது, இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்’’ என இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

இதுதொடர்பாக ‘இஸ்ரோ’ தலைவர் வி. நாராயணன் கூறியதாவது:–

‘‘இன்று நாங்கள் எல்விஎம்-3 எம்6 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளோம். இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும். அமெரிக்காவின் புளூபேர்ட் என்ற வணிகத் தொடர்பு செயற்கைக்கோளை, திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது. இது எல்விஎம்-3 ராக்கெட்டின் 9வது வெற்றிகரமான ஏவுதலாகும். இந்த திட்டம் வெற்றி அடைந்ததன் வாயிலாக 100 சதவீதம் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த எல்விஎம்-3 எம்6 ராக்கெட் வாயிலாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஏவுதல்களும் வெற்றிகரமாக அமைந்துள்ளன. இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே இதுதான் மிகவும் அதிக எடை ஆகும். நாங்கள் இந்த செயற்கைக்கோளை 1.5 கிலோ மீட்டருக்கும் குறைவான துல்லியத்துடன் விண்ணில் செலுத்தியுள்ளோம். நாங்கள் இந்த ராக்கெட்டின் பேலோட் திறனை தோராயமாக 150 கிலோகிராம் மேம்படுத்தியுள்ளோம். இந்தப் பணியின் மூலம், இந்தியா இப்போது 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையையும் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு நாராயணன் கூறினார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *