ஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
சென்னை, ஜூலை.28-
விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் 165 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வானிலை தகவல்கள், பேரிடர் மேலாண்மை, எல்லை பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து பல்வேறு தரவுகளை பெறுவதற்காக விண்ணில் 55 செயற்கைக்கோள்களின் தொகுப்புகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் 7 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் கடற்கரை மற்றும் விரிவான நில எல்லைகளைக் கண்காணிக்க இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
எனவே 3 மடங்காக அதாவது 165 செயற்கைக்கோள்கள் ஆக உயர்த்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. பரந்த விண்வெளி வரைபடத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த இலக்கை வருகிற 2028 அல்லது 2029-ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடைவதை இலக்காக கொண்டுள்ளது.
2028-ம் ஆண்டுக்குள் 100 முதல் 150 செயற்கைக்கோள்களை சேர்த்து தேசிய கண்காணிப்பை அதிகரிப்பதை இஸ்ரோ நோக்கமாக கொண்டுள்ளது.
வருகிற 2027–2028ம் ஆண்டுக்குள் 52 உளவு செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது நிலம், கடல் மற்றும் வான்வழி தளங்களில் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துகிறது. இந்த திட்டத்தில் இஸ்ரோ மற்றும் தனியார் துறை பங்கேற்பு அடங்கும். இதில் 31 செயற்கைக்கோள்கள் தொழில்துறையினராலும், 21 செயற்கைக்கோள்கள் இஸ்ரோவால் கட்டமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிடப்பட்டு உள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் ஏவுதள விரிவாக்கத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா மற்றும் தமிழ்நாடு குலசேகரன்பட்டினத்திலும் 2 புதிய ஏவுதளங்கள் உருவாக்கப்படுகிறது. நடப்பாண்டில் 12 ராக்கெட் பயணங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதேபோல், இந்தியாவுக்கான தனியான விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக் நிலையத்தை 2035ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதல் விண்வெளி நிலைய தொகுதியை 2028-ம் ஆண்டுக்குள் தொடங்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. ககன்யான் மற்றும் சந்திரயான்–4 திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
![]()





