செய்திகள்

விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த ‘மனநலம்’ பாதித்த இளைஞர் மீட்பு; வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

Makkal Kural Official

சென்னை, செப். 19–

தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் வீட்டில் பலத்த பாதுகாப்பையும் மீறி மொட்டை மாடியில் பதுங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் மீட்டனர். இந்நிலையில் அடுத்து விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டின் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் பதுங்கி இருந்துள்ளார்.

பலத்த பாதுகாப்பையும் மீறி, மாடியில் அவர் அமர்ந்திருந்ததைப் பார்த்து வீட்டில் வேலை செய்யும் நபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவர் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அவசரத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மதுராந்தகத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் அருண் (24) என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்

இந்நிலையில் சிறிது நேரத்தில் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் விஜய்யின் வீட்டிற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக சோதனை நடத்தினர். முடிவில் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை. வெறும் புரளி என போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும் காவல்துறைகட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஒரே நபரா? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *