செய்திகள்

விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார் கே.ஏ. செங்கோட்டையன்

Makkal Kural Official

சென்னை, நவ. 27–

அண்ணா தி.மு.க. விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன், 1977 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக எம்ஜிஆர் பதவியேற்ற போது, முதல்முறையாக கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு, சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார் செங்கோட்டையன். எம்ஜிஆரின் விசுவாசியாகவும், தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் அறியப்பட்ட செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் தொகுதியிலிருந்து மட்டும் 8 முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத்தை திட்டமிடுவதில் வல்லவராக அறியப்பட்டவர் செங்கோட்டையன்.

அண்ணா தி.மு.க.விலிருந்து

நீக்கப்பட்டார்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அண்ணா தி.மு.க. அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, தலைமைக்கு காலக்கெடு விதித்தார். இதையடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

எம்.எல்.ஏ. பதவியை

ராஜினாமா செய்தார்

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக செங்கோட்டையன் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல் பரவியது. இது தொடர்பான கேள்விக்கும் செங்கோட்டையன் பதில் அளிக்கவில்லை. அதேபோல் த.வெ.க. தரப்பில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேட்கப்பட்டபோதும் அவரும் பதில் அளிக்காமல் மவுனம் காத்தார். இதனால் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானது.

அதனை உறுதிபடுத்தும் வகையில் செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதற்காக அவர் நேற்று காலை 11 மணியளவில் தலைமைச்செயலகம் வந்தார். அவர், நேராக சபாநாயகர் அறைக்கு சென்றார். அங்கு தான் கையோடு கொண்டு வந்திருந்த ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போட்டு, அதனை சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார்.

பின்னர் வெளியே வந்த அவரை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க சூழ்ந்தனர். ஆனால் செங்கோட்டையன், ‘‘ஒரு நாள் மட்டும் பொறுத்திருங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அதனைத்தொடர்ந்து, செங்கோட்டையனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு அவரை தி.மு.க.வுக்கு இழுக்கும் முயற்சி நடக்கிறதோ என்ற கேள்வியை எழ செய்தது. பின்னர் செங்கோட்டையன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். காரில் இருந்து அண்ணா தி.மு.க. கொடியையும் அகற்றினார்.

இதற்கிடையே த.வெ.க. தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டுக்கு நேற்று மாலை வந்தார். அங்கு அவர் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுடன் ஆலோசனை நடத்தினார். தி.மு.க.வா?, த.வெ.க.வா? என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று மாலை 4.36 மணிக்கு செங்கோட்டையன் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டுக்கு திடீரென்று சென்றார். அவரை ஆதவ் அர்ஜுனா தனது காரில் அழைத்துச் சென்றார். அங்கு சுமார் 2 மணி நேரம் விஜய்யுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் இருவரும் மனம் விட்டு பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினர்.

த.வெ.க.வில் இணைந்தார்

இந்தநிலையில் இன்று காலை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார். ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் முறைப்படி த.வெ.க.வில் இணைந்தார். த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு அனுபவமும், தேர்தல் பிரசாரங்களை ஒருங்கிணைக்கும் ஆளுமையும் படைத்த செங்கோட்டையனின் வருகை தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

செங்கோட்டையனை தொடர்ந்து புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *