செய்திகள்

விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறியுள்ளார்; அவரை சந்தித்தது உண்மை

Makkal Kural Official

காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி

சென்னை, ஜன. 7–

விஜய்யை சந்தித்தது உண்மைதான். அவர் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறியுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் திமுகவுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும் சில காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியிடும் கருத்துகள், கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியிட்ட கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி, தமிழக அரசுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனால், காங்கிரஸ்–தவெக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற பேச்சு மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வருகைதந்த பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

“காங்கிரஸ் கட்சி பலவீனமாகி கொண்டு இருக்கிறது. கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்காகவே கூடுதல் சீட்கள் மற்றும் ஆட்சியில் பங்கு கேட்கிறோம். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அதிக எண்ணிக்கையில் தேர்தலில் போட்டியிடுவது அவசியம்.

மக்கள் விஜய்யை நடிகராக பார்க்கவில்லை, தலைவர் விஜய்யைப் பார்க்கதான் வருகின்றனர். அவர் ஒரு அரசியல் சக்தியாக மாறிவிட்டார். அதை மறுக்கவே முடியாது. விஜய்யை சந்தித்தது உண்மைதான். அதில் என்ன தவறு உள்ளது? அதற்கு மேல் எதையும் சொல்ல மாட்டேன். தனிப்பட்ட முறையிலும் கூட நான் அவரை சந்திக்கலாம்தானே? தமிழ்நாட்டில் மட்டும்தான் சந்தித்ததை வைத்து இவ்வளவு பிரச்சினை எழுகிறது. விஜய்யை பார்க்க மக்கள் உற்சாகமாக வருகிறார்கள். அது ஓட்டாக மாறுமா, மாறாதா என்பது கேள்வியாக உள்ளது. ஆனால் அவர் அரசியல் வாதியாக மாறிவிட்டார். கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை. தொண்டர்கள் கோரிக்கைகள் வைக்கலாம். இது ஒரு ஜனநாயகக் கட்சி. கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, ‘‘தமிழகத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட்டு நிதிநிலை அறிக்கை குறித்து நீங்கள் வெளியிட்ட கருத்து சர்ச்சையாகி உள்ளதே?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரவீன் சக்கரவர்த்தி, “இதில் எந்த சர்ச்சையும் இல்லை. நான் உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடவில்லை. தமிழகத்தின் கடன் நிலை குறித்து ரிசர்வ் வங்கி என்ன கூறியுள்ளது என்பதைத்தான் எடுத்துச் சொன்னேன். அது ஒரு கருத்துக்கணிப்புதான்” என்றார்.

இதற்கு முன்னதாக ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்பியும், மக்களவை காங்கிரஸ் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *