செய்திகள்

விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளிவருதில் மீண்டும் சிக்கல்?

Makkal Kural Official

* தணிக்கைச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு

* தீர்பை எதிர்த்து சென்சார் போர்ட் மேல்முறையீடு

சென்னை, ஜன. 9–

விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் அந்த படம் ‘பொங்கலுக்கு’ வெளிவருதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கிய ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரு படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும்வரை மறுஆய்வு செய்ய தணிக்கை வாரியத்துக்கு முழு அதிகாரம் இருப்பதாக வாதிடப்பட்டது. ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரைத்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்துக்கு யு/ஏ சான்று வழங்க, தணிக்கை வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி பி. டி. ஆஷா உத்தரவிட்டார்.

மேலும், படத்தை மறுஆய்வுக்கு அனுப்புவது ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்து, ஜன நாயகன் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பிய உத்தரவையும் சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.

மீண்டும் சிக்கல்

இதனைத் தொடர்ந்து, ஜன நாயகன் திரைப்படம் 12 அல்லது 13 ஆம் தேதிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்சார் போர்டு தரப்பில், தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில், மத்திய அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ ஆர் எல் சுந்தரேசன் முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்த நிலையில், திங்கள்கிழமை அன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தணிக்கை வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால், எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதியே முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவை தயார் செய்து தாக்கல் செய்யும் பணியை தீவிரமாக மத்திய தணிக்கை வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதனால், ஜன நாயகன் திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *