விஜய்யின் த.வெ.க. கட்சிக்கு தேர்தல் கமிஷன் ‘விசில்’ சின்னம் வழங்கியுள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் கமிஷன் தேர்தல் ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது. பல்வேறு பணிகளை அது முன்னெடுத்து இருந்தாலும், தேர்தல் கமிஷனில் பதிவு பெற்ற, அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணியையும் தற்போதே தொடங்கி விட்டது.
அங்கீகாரம் பெறாத கட்சிகளை பொறுத்தவரை அவை தங்களுக்கு பொது சின்னத்தை கேட்கும். இதற்காக தேர்தல் கமிஷனில் தனி கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்படும். இதனை தேர்தல் கமிஷன் பரிசீலித்து சலுகை அடிப்படையில் பொது சின்னங்களை ஒதுக்கீடு செய்யும். 1968-ம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடுகள் நடைபெறுகிறது.
இதன்படி 2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி ‘விசில்’ சின்னத்தை பொது சின்னமாக வழங்க கோரிக்கை விடுத்தது.
இதனை பரிசீலித்த இந்திய தேர்தல் கமிஷன், சலுகை அடிப்படையில் அந்த சின்னத்தை தமிழ்நாடு முழுவதும் அந்த கட்சிக்கு அனுமதித்து கடிதம் அனுப்பி இருக்கிறது.
த.வெ.க.வுக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டதையொட்டி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் விஜய்யை வாழ்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். ‘விசில்’ அடித்தும், கட்சிக்கொடியை காட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத் தினர்.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அதேபோல் தமிழகம் முழுவதும் த.வெ.க. தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, கட்சிக்கு ‘விசில்’ சின்னம் கிடைத்ததை கொண்டாடினர்.
சில இடங்களில் சுவர்களில் ‘விசில்’ சின்னத்தை வரைய தொடங்கிய காட்சிகளை பார்க்க முடிந்தது.
வலைத்தளங்களிலும் ‘டி.வி.கே. விசில்’ என்ற வாசகம் ‘டிரெண்டிங்’கில் முதலிடத்தை பிடித்தது. முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ‘விசில்’ சின்னத்தை பதிவிட்டு, வலைத்தளத்தை த.வெ.க.வினர் தெறிக்க விட்டனர்.
‘டார்ச் லைட்’
இதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, கடந்த முறை ஒதுக்கப்பட்ட சின்னமான ‘டார்ச் லைட்’ சின்னத்தை மீண்டும் ஒதுக்கி உத்தரவிட்டு உள்ளது.
5 சதவீத தொகுதிகளில்
பயன்படுத்த வேண்டும்
இந்த சின்னங்கள் வருகிற சட்டசபை தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்று தேர்தல் கமிஷன் அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளது. அதுவும் தமிழ்நாட்டுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சலுகை கோரி பெற்ற இந்த சின்னங்களை இந்த கட்சிகள் குறைந்தபட்சம் 5 சதவீத தொகுதிகளில் பயன்படுத்த வேண்டும். அதாவது 234 தொகுதிகளில் 5 சதவீத தொகுதிகளில் அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிறுத்தப்படா விட்டால் பொது சின்னம் கிடைக்காது என்றும் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
![]()





