வேலூர்: நவ.23:
விஐடி பல்கலைகழகம் போபால் மையத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு வேந்தர் ஜி.விஸ்வநாதன் சான்றிதழ்கள் வழங்கி சிறபித்தார்.
விஐடி பல்கலைகழகம் போபால் மையத்தின் சார்பில் 3–-வது ஆண்டாக தமிழ் மொழியின் சிறப்பை இன்றைய மாணவர்கள் உணர்ந்து கல்வி பயின்று எதிர்காலத்தில் தமிழ்மொழியை சிறந்து விளங்கிட செய்ய இப் போட்டிகள் நடத்தபடுகிறது. குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் நடத்த திட்டமிட்டு, இதை மாநில அளவில் நடத்த வழிவகை செய்யப்பட்டு, அதில் திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்ப்பட்டன.
இந்த அனைத்து போட்டிகளும் வேலூர் விஐடி பல்கலைகழக அண்ணா அரங்கில் விஐடி துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது. விஐடி போபால் மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான இப்போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 38 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து தலா ஒரு மாணவன், ஒரு மாணவி என மொத்தம் 152 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டி 3 சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதில் 15 தமிழ் ஆசிரியர்கள் நடுவர்களாகப் போட்டியை மேற்பார்வையிட்டனர்.
அதேபோல சதுரங்கப் போட்டியில் 38 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த தலா ஒரு மாணவன், மாணவி என மொத்தம் 76 பேர் பங்கேற்றனர். இப்போட்டி 7 சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதில் இருவர் நடுவர்களாக இருந்து போட்டியை மதிப்பிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், பங்கேற்று இப்போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். இதில் அறங்காவலர் ரமணி பாலசுந்தரம், உதவித் துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 8-ம் தேதி வேலூரில் நடைபெறும் விழாவில் வேந்தர் கோப்பையுடன், ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
![]()





